
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததை எதிர்த்தும், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலவரம்பு நிர்ணயிக்கக்கோரியும் கடந்த 2023-ம் ஆண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்து கடந்த 8-ந்தேதி வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியது. 415 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில் பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பின் பலன் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, கவர்னர்களோடு உரசல் ஏற்பட்டுள்ள பா.ஜனதா அல்லாத அரசுகள் உள்ள பல மாநிலங்களுக்கும் நல்ல வழியை காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பில் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து அனுப்பியது சட்டத்துக்கு விரோதமாகும். அந்த 10 மசோதாக்களும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதே சட்டமாகிவிட்டது என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்கிறோம். கவர்னருக்கு தன்னிச்சையாக செயல்பட்டு அந்த மசோதாக்களை தடை செய்வதற்கான வீட்டோ அதிகாரமோ, அதை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்கான பாக்கெட் வீட்டோ அதிகாரமோ கிடையாது. அரசியல் சட்டத்தின் 201-வது பிரிவின்படி ஜனாதிபதிக்கும் வீட்டோ அதிகாரமோ, பாக்கெட் வீட்டோ அதிகாரமோ கிடையாது.
கவர்னர் என்பவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நடக்க கடமைப்பட்டவர். சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்கவேண்டும். ஒருவேளை திருப்பி அனுப்பி மீண்டும் சட்டசபையில் அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பும் பட்சத்தில், அதுவும் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளித்து கட்டாயமாக அனுப்பியே தீரவேண்டும். ஒருவேளை ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை என்று கருதி, ஜனாதிபதிக்கு அனுப்பினால் அவரும் அதிகபட்சம் 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். அதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணங்களை மாநில அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுபோல ஜனாதிபதி மத்திய அரசாங்கம் மூலமாக ஏதாவது விளக்கம் கேட்டால் அதற்கு மாநில அரசு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை அந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு முரணாக இருந்தால், அதுதொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் பெறலாம். கவர்னர்கள் அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால் மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். ஆக கவர்னருக்கும், ஏன் ஜனாதிபதிக்கும் சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்தது வரலாற்றில் முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாகும். இந்த தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்தை நோக்கி செல்லும் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். மேலும் கூட்டாட்சியை வலுப்படுத்தும் தீர்ப்பு என்றால் அது மிகையாகாது. எதிர்காலத்தில் கவர்னர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தால் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடருவது போல, ஜனாதிபதியையும் எதிர்த்து வழக்கு தொடருவதற்கான வாசலை இந்த தீர்ப்பு திறந்து வைத்து விட்டது.
மொத்தத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கிய இந்த தீர்ப்பால் ஜனநாயகம் மேலும் ஒளி வீசுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.