சென்னை: “கடுமையான எதிர்ப்புகளையும் மீறி வக்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது இந்திய அரசமைப்பின் மீதான ஒன்றிய அரசின் தாக்குதல். இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் கூறினார். மேலும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்எல்ஏ.,க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
முன்னதாக, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.