ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் ஆகியோரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தாக்குதல் நடத்தி கொன்றது. ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது.
இதன்பின்னர், லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதற்காக இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஏற்பாடானது. ஆனால், விதிமீறலில் ஈடுபட்டால் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், லெபனான் நாட்டில் பெகா பகுதியில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகள் மீது இஸ்ரேல் விமான படை நேற்றிரவு வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில், ஆயுத உற்பத்தி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட விசயங்களுக்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டு இருந்த ராணுவ உட்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
இதேபோன்று, ஆயுதங்களை கடத்தி வேறிடங்களுக்கு கொண்டு செல்வதற்காக சிரியா-லெபனான் எல்லை பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த, ஹிஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பு மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வை மீறும் வகையில், இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் ஒன்று தாக்குதல் நடத்த முற்பட்டு உள்ளது. எனினும், இதனை இஸ்ரேல் விமான படை வழிமறித்து முறியடித்தது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே, இஸ்ரேல் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், இஸ்ரேல் பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.