மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' பந்து வீச்சாளராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை பெறுகிறார்.
இதே போல் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு இந்திய ஜாம்பவான் 51 வயதான சச்சின் தெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். மும்பையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு விழாவில் அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.