
மும்பை,
இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்க தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். தற்போது ஐ.பி.எல். போட்டி தொடங்கினாலும் முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும் போது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ந்தேதி நடைபெறுகிறது.
இதனிடையே இந்த மாத கடைசியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருப்பதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.-ல் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதில் முக்கியமாக ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதனால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அந்த அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.
இந்நிலையில் மும்பை அணியில் இடம் பெற்றுள்ள ரிக்கல்டன், கார்பின் போஷ் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் வில் ஜாக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் லீக் சுற்று வரை மட்டுமே விளையாட உள்ளனர். பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி தேசிய அணிக்காக விளையாட உள்ளனர்.
இதனால் ரிக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோருக்கு மாற்று வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ரிச்சர்ட் கிளீசன் ஆகியோரை மும்பை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.