
தோஹா,
டயமண்ட் லீக் தொடரின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசியவீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ) என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் முடிவில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடம் பிடித்தார்.