
சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கோடை வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. அந்த வகையில் நேற்றும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. நேற்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104.36 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன்விவரம்:-
1) ஈரோடு - 104 டிகிரி (40.2 செல்சியஸ்)
2) வேலூர் - 100.94 டிகிரி (39.2 செல்சியஸ்)
3) கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
4) தஞ்சாவூர் - 100.4 டிகிரி (368 செல்சியஸ்)
5) திருத்தணி - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்)
இந்த நிலையில், தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில், 'கோடை வெப்பம் முடிவுக்கு வருகிறது. இனி வரும் நாட்களில் வடதமிழகத்தில் மழை அதிகரிக்கும். இந்த ஆண்டு, தமிழகத்திற்கு மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இந்த ஆண்டு தமிழகத்தில் எங்கும் வெப்ப அலை பதிவாகவில்லை. அதேபோல், கடந்த 25 ஆண்டுகளில் 2004, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளை போல நடப்பாண்டும் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகவில்லை' என பதிவிட்டுள்ளார்.