சிறுதானியப் பயிர்கள் பொதுவாக ஊட்டச்சத்துகள் நிரம்பியவை. அவற்றில் அதிகமான சத்துக்கள் நிறைந்தது கம்புதான். கம்பின் முக்கியத்துவத்தை அறிந்த பலர் தற்போது கம்பை உணவில் சேர்த்துக்கொள்ள ஆர்வம் கொள்கிறார்கள். இதனால் கம்பு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் கம்பு பயிரிடும் நிலப்பரப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய கம்பு பயிரை லாபகரமான முறையில் சாகுபடி செய்வது குறித்து விளக்குகிறார் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி. தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு தானியப் பயிர் கம்புதான். இது நீர்வளம், மண் வளம் குறைந்த இடங்களிலும் செழித்து வளரும் இயல்பு கொண்டது. தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகப்பெரிய அளவில் உதவிபுரிகிறது. சந்தையில் அதிகமாக வரவேற்கப்படும் இந்தக் கம்பினை விவசாயிகள் பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம்.விதைப் பண்ணை மூலம் கம்பு விதைகளை உற்பத்தி செய்து வேளாண்மைத்துறையின் கீழ் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை (டான்சீடா) யின் மூலம் ஒரு கிலோ ஆதார நிலை விதையாக ரூ.45க்கும், சான்று நிலை விதையாக ரூ.50க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கம்பு லட்டு, சத்து மாவு, கம்பு முறுக்கு, கம்பு பிஸ்கட், கம்புப்பொரி மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தொழில் முனைவோர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை தருகிறது.
ரகம் மற்றும் விதைப்பு முறை
வீரிய ஒட்டு ரகங்களான தன்சக்தி, கோ-9, கோ-10 போன்ற ரகங்கள் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரகங்களை மானாவரியில் ஆடிப்பட்டமாகவும், புரட்டாசி பட்டமாகவும் பயிரிடலாம். இறவையில் மாசிப் பட்டமாகவும், சித்திரைப் பட்டமாகவும் பயிரிடலாம்.ஒரு ஏக்கரில் விதைக்க 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டர் இடைவெளியும், செடிக்குச் செடி 15 செ.மீட்டர் இடைவெளியும் விட வேண்டும்.
உர அளவு
ஒரு எக்டருக்கு தொழுஉரம் 12.5 டன், தழைச்சத்து 70 கிலோ, மணிச்சத்து 20 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். கம்பின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டைத் தடுக்க தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் சிறுதானிய நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை 40 கிலோ மண்ணுடன் கலந்து இட வேண்டும். கம்பு விதைத்த 15, 30வது நாட்களில் பயிருக்குப் பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பது போல் களை எடுக்க வேண்டும். அல்லது களைக்கொல்லி மூலம் கட்டுப்படுத்த விதைத்த 3ம் நாள் மற்றும் 25-30 நாட்களில் அட்ரசின் 250 கிராமை 500 லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறை
குருத்து ஈக்களைக் கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டைச் சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய்ப் பூச்சிளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க 750 கிராம் கார்பரில் 50 எஸ்பி, 5 சதவீதம் மாலத்தியான் ஆகியவற்றை பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். தண்டுத்துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறியை நிறுவ வேண்டும். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப்பை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தேன் ஒழுகல் நோயினைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்சில் அல்லது கார்பெண்டசிமை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். துருநோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் 10 தினங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி நன்கு காயவைத்து பின்னர் சேமித்து வைக்க வேண்டும். மானாவாரி சாகுபடியில் 1.5 – 2.5 டன்னும், இறவை சாகுபடியில் 2.5 – 3.5 டன்னும் மகசூலாக கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம். உழவர் செயலியின் மூலமும் இதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
The post லாபகரமான கம்பு சாகுபடி! appeared first on Dinakaran.