பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு 2 மையங்கள் அமைப்பு வேலூர் மாவட்டத்தில்

3 hours ago 1

வேலூர், மார்ச் 11: வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கி, 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதேபோல், பிளஸ்1 பொதுத்தேர்வுகள் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தேர்வு நிறைவு பெற்றதும் சேகரிக்கப்படும் விடைத்தாள் அனைத்தும் மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் சேகரிப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதில், வேலூர் மாவட்டத்தில் பிளஸ்2 மற்றும் பிளஸ்1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் வேலூர் சாயிநாதபுரம் கிருஷ்ணசாமி அரசு நிதியுதவி பெறும் பள்ளி, குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 2 மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மையத்துக்கு விடைத்தாள் கொண்டு செல்லப்பட்டதும், அங்கு கலக்கி பிரித்தல் பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளது. மாவட்டத்தில் 2 விடைத்தாள் சேகரிப்பு மையங்களிலேயே விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

இதையடுத்து, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிகளும், அதன்பிறகு பிளஸ்1 விடைத்தாள் திருத்தும் பணிகளும் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் அரசு தேர்வுகள் துறை தரப்பில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு 2 மையங்கள் அமைப்பு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article