
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் அப்டேட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஒவ்வொருவரிடமிருந்தும் ஏராளமான ஆர்வம், அன்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் இப்படம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் இந்த பிரேம்களில் உள்ள அனைவரின் ஆதரவும் இல்லாமல் இப்படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை.
ஒரு பிரேமில் கூட சமரசம் செய்யாமல், அசலான, புதுமையான பொழுதுபோக்குத் திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை எடுத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் உங்கள் அனைவரின் அன்புடனும் ஆதரவுடனும் தொடங்குகின்றன! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிகமாக கொண்டாட, பண்டிகை தேதியில் இப்படத்தை உங்களுக்காக கொண்டு வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.