
சென்னை,
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டிரெயின்' படத்தில் நடிகை சுருதிஹாசன் , நரேன் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் மிஷ்கின் இயக்கும் 'டிரெயின்' படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷ்ன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே இரவில் ரெயிலில் நிகழும் சம்பவத்தின் பின்னணியில் டார்க் திரில்லர் ஜானரில் 'டிரெயின்' படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சுருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டார்க் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர், "டிரெயின் படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் மிஷ்கின்தான் இந்த படத்தில் இசை அமைத்திருக்கிறார். மிரட்டி இருக்கிறார். அவர் மிகப்பெரிய ஆத்மார்த்தமான கலைஞன். தொழில் பக்தி உள்ள கலைஞன். இந்தியாலயே எல்லோரும் டிரெயின் ஷெட் போட்டு இருப்பாங்க. அதில் 3 கம்பார்ட்மெண்ட் மட்டும்தான் போட்டு இருப்பாங்க. நாங்க இந்த படத்துல 8 கம்பார்ட்மென்ட் வரைக்கும் போட்டு இருக்கோம். சுருதிஹாசனின் பெர்பார்மன்ஸ் பெரிய அளவில் பேசப்படும். விஜய் சேதுபதி வாழ்ந்து இருக்காரு. இது சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கக்கூடிய படம்" என்று தெரிவித்துள்ளார்.