
ஆண்டிப்பட்டி,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
அதன்படி, இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'இட்லி கடை' படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி நடிகர் தனுஷின் இட்லி கடை படப்பிடிப்புக்காக ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இட்லிகடை படத்தின் படப்பிடிப்பு, அனுப்பப்பட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டநிலையில் , பிரிக்காமல் இருந்த செட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.