சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் மாநகரில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்து, நேற்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து அவரை வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு இளையராஜா அளித்த பேட்டி: மிகவும் மகிழ்வாகவும் கனிந்த இதயத்தோடும் மலர்ந்த முகத்தோடும் நீங்கள் எல்லோரும் என்னை வழியனுப்பி வைத்தீர்கள். இறைவன் அருளால் இசை நிகழ்ச்சியின் அரங்கேற்றம் வெற்றிகரமாக நடந்துள்ளது. சிம்பொனி 4 பகுதிகளாக கொண்டது. அந்த முதல் மூவ்மெண்டில் இருந்து 4வது மூவ்மெண்ட் முடியும் வரை யாரும் கைதட்ட கூடாது. அதுதான் விதிமுறை. இசை ரசிகர்களும் பார்வையாளர்களும், முதல் மூவ்மெண்ட் முடிந்ததும் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இது தமிழக மக்கள் எனக்கு அளித்த ஆதரவால்தான் இதேபோல் சிறப்பாக நடத்தி முடிக்க முடிந்தது. அதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி. நான் லண்டன் செல்வதற்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் நேரடியாக என்னை வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நன்றி. இப்போது என்னை அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது, மனம் நெகிழச் செய்தது. சிம்பொனி இசையை அனைவரும் கேட்க வேண்டும். சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். அந்த நிகழ்ச்சி நம் மண்ணிலும் நடக்கும். அதுவரை காத்திருக்கவும். இசை ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என்று அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். நான் பண்ணைப்புரத்திலிருந்து புறப்படும்போது வெறும் காலில் தான் புறப்பட்டு வந்தேன்.
நமது இளைஞர்கள் இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அவரவர்கள் துறையில் மென்மேலும் வளர வேண்டும், சாதிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவருக்கு 82 வயது ஆகிவிட்டது. இனிமேல் என்ன பண்ணப் போகிறார் என்று நினைத்து விடாதீர்கள். இது ஆரம்பம் தான். இன்னும் இருக்கிறது. லண்டனை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி கொண்டு இருக்கிறது. இந்த இசை உலகெங்கும் எடுத்துச் சொல்லப்படும். இவ்வாறு இளையராஜா கூறினார். தொடர்ந்து, அவரிடம் பிரதமரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நான் பிரதமரை விரைவில் சந்திப்பேன் என்றார்.
The post லண்டனை தொடர்ந்து ஜெர்மன், பிரான்ஸ், துபாய் உள்பட 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜா தகவல் appeared first on Dinakaran.