
ஐதராபாத்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்நிலையில், 2-வது ஓவரில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 8 ரன்களிலும், நிதிஷ் குமார் ரெட்டி 2 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய அபினர் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். அரைசதம் கடந்த கிளாசன், 44 பந்துகளில் 71 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் , ரோகித் சர்மா களமிறங்கினர் . தொடக்கத்தில் ரியான் ரிக்கெல்டன் 11 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ஜாக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். ரோகித் சர்மா , சூர்யகுமார் இணைந்து சிறப்பாக விளையாடினர் . ரோகித் சர்மா அரைசதமடித்து அசத்தினார் .
இறுதியில் 15.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது .