
புதுடெல்லி,
சென்னை அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் மோசமான தொடக்கம் கண்டு வருகிறது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பாதியில் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றார். அவரது தலைமையிலும் அணியின் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லை. இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இனிவரும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று அளித்த ஒரு பேட்டியில்,
'இந்த சீசனில் நாங்கள் எங்களுடைய திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை. நாங்கள் முன்னேற்றம் காண முயற்சிக்கிறோம். அடுத்து வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். இது ஒரு போட்டி தான். மற்றபடி நாங்கள் மோசமான நிலையில் இருப்பதாக ஒருபோதும் நினைக்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அது மாதிரியானது இல்லை. ஒரு அணியாக நாங்கள் நன்றாக விளையாட வேண்டும். டோனி தலைமை ஏற்ற பிறகும் எதுவும் மாறவில்லை என்று அவரை மட்டும் குறை சொல்ல முடியாது. அணிக்கு எது நல்லதோ அதனை டோனி செய்வார். நிர்வாகியாக நாங்கள் சென்னை அணியிடம் இருந்து சிறந்த செயல்பாட்டை எதிர்பார்க்கிறோம். அணியை விமர்சிப்பது எங்களுடைய வேலையில்லை' என்றார்.