![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38422387-ker.gif)
வேலூர்,
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி செல்லும் ரெயிலின் மகளிர் பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் ஜோலார்பேட்டை வந்தடைந்து புறப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த பெண் பயணம் செய்த மகளிர் பெட்டியில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள பூஞ்சோலை கிராமம் சின்னநாவல் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஹேமராஜ் (வயது 28) அத்துமீறி ஏறினார்.
அவர் அந்த கர்ப்பிணி பெண்ணின் உடைகளை கழற்ற முயற்சி செய்துள்ளார். தன்னை தற்காத்துக்கொள்ள நடந்த போராட்டத்தில் அந்த பெண் ஹேமராஜை காலால் உதைத்து விட்டு அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்த முயன்றார். அப்போது அவரை ஹேமராஜ் தலையை பிடித்து இழுத்து ஓடும் ரெயிலில் இருந்து கொடூரமாக கீழே தள்ளிவிட்டார்.
கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்று விட்டது தெரிய வந்தது. மருத்துவமனைக்கு வந்த முதல் நாள் ஸ்கேன் செய்த போது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் மீண்டும் ஸ்கேன் செய்த போதுதான் சிசு இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
இந்நிலையில் கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல்நலப் பிரச்சினைகளால் உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று காலை சென்னை ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மற்றும் சென்னை ரெயில்வே மருத்துவ அலுவலர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு கருணைத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.
இதனிடையே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து தள்ளிவிட்டஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.