கில் வேண்டாம்... பும்ரா இல்லையென்றால் இவரிடம் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் - அஸ்வின்

3 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.

ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது.

பி.சி.சி.ஐ வட்டாரங்கள் அளித்த தகவலின் படி இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், பும்ரா இல்லையெனில் தற்போதைய இந்திய அணியில் மிகவும் சீனியராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரவீந்திர ஜடேஜா தான் இந்திய அணியின் மிகவும் மூத்த வீரர் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே, அவர் கேப்டன்ஷிப் பொறுப்பு சம்பந்தமான விவாதங்களில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய வீரரைக் கேப்டனாக வளர்க்க நினைத்தால் அவரை 2 வருடங்கள் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள். ஜடேஜா கேப்டன்ஷிப் வேலையை செய்வார்.

ஜடேஜா தலைமையில் அவர் துணைக் கேப்டனாக செயல்படலாம். இங்கே நான் ஜடேஜாவை வைல்ட் கார்டாக போடுகிறேன். குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதிப் பெறும் என்று நம்புகிறேன். கில் அதில் விளையாடிய கவுரவத்தை பெற்றால் அடுத்தக் கேப்டனாக வருவது எளிதாக இருக்கும்.

ஆனால், ஐ.பி.எல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக விளையாடுவதை வைத்துக்கொண்டு கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வது எளிதல்ல. ஏனெனில், டெஸ்ட் கேப்டன் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article