
சென்னை,
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.
நேற்று 'ரெட்ரோ' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இணைந்து பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் கலந்து கொண்டார். படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் " சூர்யா நடிப்பு துறையில்தான் வருவார் என ஜோதிடர் கூறினார். நான் நம்பவே இல்லை. சூர்யாவும் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் என எண்ணினார். மணி ரத்னம் தயாரித்து வசந்த் இயக்கிய நேருக்கு நேர் திரைப்படத்தின் லுக் டெஸ்டிற்கு சென்றார். பிறகு திரைப்படம் வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது. மணி ரத்னம் மற்றும் வசந்திற்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சூர்யாவை வைத்து இயக்கிய அனைத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ரெட்ரோ படம் மாபெரும் வெற்றி பெற ரசிகர்களின் பேராதரவு வேண்டும்" என கூறினார்.
சூர்யா 'ரெட்ரோ' திரைப்படத்தில் லவ் டீடாக்ஸ் என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்கு சூர்யா மற்றும் ஷ்ரேயா இணைந்து நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.