புதுடெல்லி: ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில், 150 விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன; கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதமாகின. மழை தொடர்பாக பல் வேறு இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பக் காற்று வீசிய நிலையில், இன்று பெய்துள்ள மழையால் மக்கள் மகிழ்ந்துள்ளனர். ஆனால் விமானம் மற்றும் ெபாது போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘டெல்லியில் அடுத்த சில மணிநேரங்களில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரித்தது. டெல்லிக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் இன்று காலை 8.30 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
காலை 5.30 மணி முதல் காலை 5.50 மணி வரை, பிரகதி மைதானத்தில் மணிக்கு 78 கிமீ வேகத்தில் அதிகபட்ச காற்று வீசியது. அதேபோல் நகரின் பிற பகுதிகளிலும் பலத்த காற்று வீசியதால், பொதுமக்களின் குடியிருப்புகள் பறந்தன. டெல்லியின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மக்கள் தங்களது வீட்டிற்குள் இருக்கவும், ஜன்னல்களை மூடி வைக்கவும், நிலைமைகள் சீராகும் வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
The post ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இடி, மின்னலுடன் கனமழை: 4 பேர் பலி; 150 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.