காரியாபட்டி, மே 3: காரியாபட்டி அருகே தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி பலியானது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் இருபுறமும் அடர்ந்த காடுகளும் விவசாய நிலங்களும் இருப்பதால் புள்ளி மான்கள், முயல், மயில் போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை வெயிலின் காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் நீர் தேடியும் உணவு தேடியும் மான், மயில், முயல் போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று நீர் தேடி காட்டுப் பகுதிக்குள் இருந்து கீழ் அழகியநல்லூர் விலக்கில் சாலையை கடக்க முயன்ற மூன்று வயது பெண் புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பலியானது. அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். மல்லாங்கிணறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரியாபட்டி அருகே தண்ணீர் தேடி வந்த மான் வாகனம் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.