ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 hours ago 1


சென்னை: பதிவுத்துறை சார்பில் ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை ரூ39 கோடியே 29 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம் – கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் – முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் – குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம் – வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம் – மங்கலம்பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் – ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் – திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ₹30 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article