கும்பாபிஷேக யாக சாலை பூஜை இன்று துவக்கம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடம் புறப்பாடு: திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்

2 hours ago 2

தஞ்சை: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று மாலை துவங்குகிறது. இதையொட்டி காலை கடம் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து வந்தனர். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழா வரும் 10ம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3ம் தேதி தொடங்கின. இன்று (7ம் தேதி) மாலை முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை கடம் புறப்பாடு நடந்தது. கோயில் அருகே உள்ள கோதண்டராமர் கோயிலில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் யாக குண்டத்துக்கு மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

தொடர்ந்து யாக அலங்காரம் நடந்தது. மாலை 4.30 மணி முதல் திருக்குடங்கள் யாக சாலைக்கு கொண்டுவரப்படடு முதல்கால யாக பூஜை துவங்குகிறது. நாளை(8ம் தேதி) காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை, 9ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, மாலை ஐந்தாம் காலையாக பூஜை நடைபெறுகிறது. குடமுழுக்கு நாளான 10ம் தேதி காலை 9.10 மணிக்கு மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து 9.45 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. பின்னர் 10 மணிக்கு மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் மூலாலய மகா குடமுழுக்கு நடைபெற உள்ளது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். அன்று இரவு மாரியம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

 

The post கும்பாபிஷேக யாக சாலை பூஜை இன்று துவக்கம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடம் புறப்பாடு: திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article