அண்ணா நகர்: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பொது செயலாளர் பிரேமலதா தலைமை வகித்து பேசியதாவது: வருகிற 12ம் தேதி தேமுதிகவின் கொடிநாள். இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும், பட்டி தொட்டிகளிலும் கட்சி கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய பிரச்னைகளுக்கும் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடுகிறோம். 2026 தேர்தலில் நாம் இருக்கிற கூட்டணி மிகப்பெரிய வலுவான கூட்டணியாக நிச்சயம் மாற்றம் இருக்கும். அந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறக்கூடிய அளவு வியூகங்களை அமைத்து, யார் யாருக்கு எத்தனை தொகுதி, எத்தனை இடங்கள், யார் வேட்பாளர் என்பது ஆலோசிக்க இருக்கிறோம். மகத்தான கூட்டணியாக அமையும். மாபெரும் வெற்றியும் பெறும். அந்த கூட்டணியில் இன்னும் பலர் இணைய இருக்கிறார்கள். தேர்தல் என்றாலே வெற்றி தான் அனைவருடைய இலக்காக இருக்கும்.
வெற்றிகான இலக்கை தீர்மானித்து அதன் நோக்கி பயணிப்போம். ஏப்ரல் மாதம் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படும். அன்று மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்படும். மாவட்ட செயலாளர்களில் நிறைய மாற்றம் இருக்கும். தர்மபுரி மாவட்டத்தில் அவைத் தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். தேதி பின்பாக அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். மாநில துணைச் செயலாளர் எல்.கே.சதீஷ் பேசுகையில், ‘வரும் சட்டமன்ற தேர்தலுக்குள்ளாக, கேப்டனுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு நம் கட்சியினர் ஒவ்வொருவரும் இ-மெயில் மூலமாகவே அல்லது கடிதம் மூலமோ வலியுறுத்த வேண்டும். கோயம்பேடு ரவுண்டானாவுக்கு கேப்டன் பெயரை சூட்டுதல் மற்றும் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வரும் 12ம் தேதி ‘வெள்ளி விழாவை’ முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடி ஏற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்வது மற்றும் துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடலோர காவல் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
இதை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும், மணல் குவாரிகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும், தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும், இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி தயாரித்துள்ள கேப்டன் உருவப்படம் நிறுவிய “தேர்” ஒன்றை கேப்டன் ஆலயத்தில் நேரடியாக ஒப்படைக்க உள்ளார்கள். தேரை தயாரித்த அவர்களுக்கு பொதுச் செயலாளர், நிர்வாகிகள் சார்பில் நன்றி தெரிவித்தல், புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்னையில் குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை வேண்டும், சேதமான சாலைகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.
The post தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; வரும் சட்டமன்ற தேர்தலில் மகத்தான கூட்டணி அமையும்: பிரேமலதா பேச்சு appeared first on Dinakaran.