ரூ11,210 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள்; திருவண்ணாமலையில் மகேந்திரா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை: 52,500 பேருக்கு வேலைவாய்ப்பு

1 month ago 5

* ராணிப்பேட்டையில் மெகா காலனி பூங்கா

தமிழ்நாடு தொழில் வளத்தின் முதன்மையான மாநிலம் எனும் இலக்கை அடைவதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, அரசின் ஒத்துழைப்பு, போக்குவரத்து வசதி, மனித வளம் போன்றவை இங்கு தொழில் நிறுவனங்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மேலும் 14 முன்னணி தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதலை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை அளித்திருக்கிறது. அதன்மூலம், டாடா மோட்டார்ஸ், பிரீலேண்ட் இன்டஸ்ட்ரியல்ஸ், லீப் கிரீன் எனர்ஜி உள்ளிட்ட 14 நிறுவனங்கள் ரூ38,698 கோடி முதலீடு செய்ய உள்ளன. அதன்மூலம், சுமார் 47 ஆயிரம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளபடி, மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனம், திருவண்ணாமலை மாவட்டத்தில் தமது உற்பத்தி நிறுவனத்தை தொடங்க உள்ளது. அதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 75 ஏக்கர் இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தொடங்குவதன் மூலம், நேரடியாக 400 பேரும், மறைமுகமாக 100 பேர் என்று சுமார் 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் மறைமுக வேலைவாய்ப்புகள் மூலம் பயன்பெறுவார்கள். எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி, எரிபொருள் செலவினமும் மிகக்குறைவு.

எனவே, எலக்ரிக் வாகனங்களுக்கு இனிவரும் காலங்களில் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பும், வரவேற்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 3 ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகளாவிய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனை வாய்ப்புகள் உள்ளன. வாகன தயாரிப்பில் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் நிறுவனமான மகேந்திரா நிறுவனம், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தடம்பதித்திருப்பது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. எனவே, தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மகேந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்க முன்வந்திருக்கிறது.

விவசாயம், கைத்தறி நெசவு போன்றவற்றை மட்டுமே வாழ்வாதரமாக நம்பியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் அடையாளம் படிப்படியாக மாறி, தொழில் வளம் நிறைந்த மாவட்டம் எனும் அடையாளத்தை பெற்று வருகிறது. செய்யாறு சிப்காட் பகுதியில் தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து தடம்பதித்து வருவதால், இம்மாவட்டத்தின் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைத்திருப்பதோடு, மாவட்டத்தின் பொருளாதாரமும் மேம்படும் நிலை உருவாகியிருக்கிறது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை 1213.43 ஏக்கர் பரப்பளவில் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி வட்டத்தில் துறையூர், அகவளம், பெருவளையம், நெடும்புலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 1213.43 ஏக்கர் நிலங்களை பனப்பாக்கத்தில் தொழிற்பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த தொழிற்பூங்காவில் சிப்காட் நிறுவனம் 470 ஏக்கர் பரப்பளவில் ஜெ.எல்.ஆர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ9ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், அதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டினர். இந்த பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ400 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. இந்நிலையில், கிராண்ட் அட்லாண்டிக்கா பனப்பாக்கம் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொழிலை விரிவுபடுத்த ரூ500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 5000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக சுமார் 2 ஆயிரம் பேருக்கும் என்று மொத்தம் 7 ஆயிரம் பேருக்கும் அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

உலக அளவில் மெகா காலணி உற்பத்தி செய்து வரும் தைவானை சேர்ந்த ஹாங் பூ இண்டஸ்ட்ரியல் குரூப் தமிழகத்தில் ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த ரூ1,500 கோடி முதலீடு செய்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் ஹாங் பூ இண்டஸ்ட்ரியல் குரூப் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உற்பத்தி அலகு பனப்பாக்கத்தில் 200 ஏக்கரில் ரூ1,500 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. இந்த தொழிற்சாலை மூலமாக சுமார் 20,000 பேருக்கு நேரடியாகவும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடு மாநிலத்தில் காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும். ஹாங் பூ நிறுவனம் விளையாட்டு ஆடைகளையும் வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நைக் மற்றும் பூமா போன்ற ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்டுகளின் முன்னணி உற்பத்தியாளர்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஹாங் பூ நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள 4 தொழிற்சாலைகளில் மொத்தம் ரூ11,210 கோடி முதலீடு செய்யப்படுகிற தொழிற்சாலைகள் மூலம் மொத்தம் 52,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வரவுள்ளதால், பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை விதைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

The post ரூ11,210 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள்; திருவண்ணாமலையில் மகேந்திரா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை: 52,500 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article