
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (11.04.2025) திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ. 5.75 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா (Stem Park) அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், வார்டு-74க்குட்பட்ட ஏகாங்கிபுரம் முதல் தெருவில் மேயர் மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி மற்றும் மூலதன நிதி ரூ. 28.29 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் மண்டபம் அமைக்கும் பணிக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையர்கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.