ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க போனவரிடம் ரூ.54 லட்சம் வரி கட்டச் சொன்ன வங்கி: கூலித்தொழிலாளி அதிர்ச்சி

2 months ago 9

காடையாம்பட்டி: வங்கியில் ரூ.2 ஆயிரம் எடுக்கச் சென்ற கூலித் தொழிலாளியை, ரூ.54 லட்சம் வருமான வரி கட்டும்படி அதிகாரி கூறியதால், அதிர்ச்சியடைந்து தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே, பண்ணப்பட்டியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(30), கூலி தொழிலாளி. அவசர தேவைக்காக நண்பரிடம் ரூ.2000 கேட்டுள்ளார். அவர் சிலம்பரசனின் வங்கி கணக்கிற்கு, ரூ.2 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதை எடுப்பதற்காக, சிலம்பரசன் தீவட்டிப்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அப்போது, அவரது கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது.

இது பற்றி வங்கி அதிகாரியிடம் சிலம்பரசன் கேட்டபோது, உங்களது பெயரில் இயங்கும் திருப்பூர் நிறுவனத்திற்கான வருமான வரி ரூ.54.31 லட்சம் கட்டாததால், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. வருமான வரி பாக்கி ரூ.54 லட்சத்து 31 ஆயிரத்து 84ஐ செலுத்தி விட்டு வந்தால், வங்கி கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், எனக்கு எந்த கம்பெனியும் இல்லை. நான் கூலி வேலை செய்து வருகிறேன் என கூறினார். ஆனால், வங்கி அதிகாரியோ, வருமான வரி அலுவலகம் அல்லது திருப்பூர் நிறுவனத்தை அணுகி விவரம் தெரிந்து கொள்ளும்படி கூறி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது ரூ.2 ஆயிரத்தை தரக்கோரி, வங்கி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வங்கி அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சிலம்பரசன் கூறுகையில், ‘அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு எந்த கம்பெனியும் இல்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலையில், நான் எப்படி 54 லட்ச ரூபாய் வருமான வரி கட்ட முடியும்?. இந்த தவறை அதிகாரிகள் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க போனவரிடம் ரூ.54 லட்சம் வரி கட்டச் சொன்ன வங்கி: கூலித்தொழிலாளி அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article