ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 88 (பகவத்கீதை உரை)

2 hours ago 1

மாயையிலிருந்து மீள முடியுமா?

நாதத்தே கஸ்ய சித்பாபம் ந சைவ
ஸுக்ருதம் விபு
அக்ஞானேனாவ்ருதம் ஞானம் தேன
முஹ்யந்தி ஜந்தவ (5:15)
‘‘யாருடைய புண்ணியத்தையும் சரி, பாபத்தையும் சரி, பரமாத்மா ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மாயையால் தம்முடைய ஞானம் மூடப்பட்டிருப்பதால், ஜீவன்கள் அவ்வாறு அவர் ஏற்றுக் கொள்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றன.’’

புண்ணியம், பாபம் என்று கருதக் கூடியவர் யார்? ‘நான்தான் ஆக்கியவன், நானே கர்த்தா’ என்று யார் நினைத்துக் கொள்கிறாரோ அவர்தான் அப்படிக் கருதிக் கொள்வார். தன் சிந்தனைக்கு, தன் சொல்லுக்கு, தன் செயலுக்குப் பலன் எதிர்பார்ப்பவர்தான் அவ்வாறு கருதக்கூடியவர். அவர்தான், தான் நல்லதைச் செய்ததாகவோ அல்லது தீயதைச் செய்ததாகவோ சொல்லிக் கொள்ளமுடியும். அந்தச் செயல்களின் விளைவே புண்ணியம் அல்லது பாபம்என்றும் அவர் நினைத்துக்கொள்கிறார். இதனாலேயே தான் செய்தது சரியானதென்றோ அல்லது தவறானதென்றோ அவரால் சொல்லிக் கொள்ளவும் முடிகிறது.

இதுதான் மாயை. தன்னை முற்றிலுமாக பரமாத்மாவிடம் அர்ப்பணிக்காதவனுடைய செயல்களும், தொடர்ந்து வரும் அவனுடைய எண்ணங்களும் அவனுடைய ஞானத்தை மூடியிருக்கின்றன. ஒருவன் தன்னைக் கர்த்தாவாக நினைத்துக்கொண்டானானால் அவனுடைய செயல்களில் நல்லது அல்லது கெட்டது என்று அவனால் பாகுபடுத்த முடியாது. எது உண்மை, எது மாயை என்றும் புரிந்துகொள்ளமுடியாது.

கல்கத்தாவில் வீதி நாடகம் ஒன்று நடைபெற்றது. அதைப் பார்க்க வித்யாசாகர் என்ற பேரறிஞர் ஒருவர் வந்தார். கதைப்படி ஒரு வில்லன் நடிகன், ஒரு பெண் கதாபாத்திரத்தைத் துன்புறுத்துகிறான். ஆரம்பத்தில் அவளிடம் சைகையால் ஆபாசம் காட்டிய அவன், பிறகு சொற்களால் அவளை வதைக்கிறான். அடுத்தடுத்த காட்சிகளில் அவனுடைய கொடுமைகள் அத்துமீறிப் போகின்றன. ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்து தப்பியோட முயற்சிக்கும் அவளைத் தாவிப் பற்றிவிடுகிறான் அவன். அவள் திமிறுகிறாள், திண்டாடுகிறாள், தவிக்கிறாள். அவனோ மேலும் மேலும் அவளை இறுக்கி அணைக்க முற்படுகிறான்.

இந்தத் தருணத்தில், பார்வையாளரான வித்யாசாகர் வெகுண்டெழுந்தார். அவருடைய உடலெங்கும் கோபம் தகித்தது. அவரால் அந்தக் காட்சியை ஒரு நாடக பாவனை என்று எண்ண முடியவில்லை. அவன் அத்தனை கொடூரமானவனாக நடித்தான்; அவளும் அத்தனை பரிதாபத்துக்குரியவளாக நடித்தாள். பளிச்சென்று மேடையேறிய வித்யாசாகர் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி நடிகனை அடிக்கத் தொடங்கினார். நடிகனோ மிகுந்த பணிவுடனும், பவ்யத்துடனும் அந்த அடிகளை வாங்கிக் கொண்டதோடு, அந்தச் செருப்பையும் இருகரம் கூப்பிப் பெற்றுக் கொண்டான்!

பார்வையாளர்கள் எல்லாம் திகைத்து நிற்க, அந்த நடிகன், ‘இந்த செருப்பை என் நடிப்புக்குக் கிடைத்த பரிசாக நான் ஏற்கிறேன். அதிலும் வித்யாசாகர் போன்ற பேரறிஞர் இப்படி என் நடிப்பை தத்ரூபமான உண்மை என்று நம்புவது எனக்குப் பெரிய பாராட்டே, நன்றி.’ என்று உவகை பொங்கக் குறிப்பிட்டான். அது வெறும் நாடகம்தான். நாடகம் முடிந்த பிறகு நடிகர்கள் எல்லாம் அவரவர் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்தான். அவர்களுக்கும் அந்த நாடகத்தின் பார்வையாளர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அந்த ஓரிரு மணிநேரம்தான். ஆனால் வித்யாசாகர் இங்கே கர்த்தாவாகிவிட்டார்! அவரால் பிற பார்வையாளர்களைப் போல அமைதியாக ரசித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. ஒரு பெண்ணின் கற்பு பறிபோகிறது என்ற அவல உணர்வால் வெகுண்டெழுந்திருக்கிறார் அவர். அவரை மாயை மறைத்துவிட்டிருந்தது. அது நாடகம்தான். முடிந்த பிறகு அந்த நடிகனும், நடிகையும் சகஜமாக சிரித்துப் பேசிக்கொண்டு போவார்கள்தான் என்ற உண்மையை அவரால் அப்போதைக்கு உணரமுடியவில்லை.

ஆனால் பிற பார்வையாளர்கள் மாயப் போர்வையைப் போர்த்திக் கொள்ளவில்லை. அவர்கள் உள்ளதை உள்ளபடி பார்த்தார்கள். என்ன வேடிக்கை பாருங்கள், மிகப்பெரிய அறிஞர் வித்யாசாகர். அவராலேயே உண்மைக்கும், நடிப்புக்கும் வித்தியாசம் பாராட்டத் தெரியவில்லை!நம்மில்கூட சிலர் திரையரங்குகளில் மனதைப் பிழியும் சோகக் காட்சிகளைக் கண்டு நாமே அறியாமல் கண்ணீர் பெருக்குகிறோம்.

அந்தக் காட்சி முடிந்தவுடன் அல்லது திரைப்படம் முடிந்த பிறகு அவ்வாறு திரைப் பாத்திரங்களோடு சேர்ந்து அழுததற்காக நாம் வெட்கப்படுகிறோம். அது வெறும் பிம்பம்தானே, அந்தக் கதாபாத்திரங்கள் புனையப்பட்டவைதானே, அவற்றை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அந்தப் படம் தவிரவேறு படங்களிலும் நடிக்கப் போய் விடுகிறவர்கள்தானே என்றெல்லாம் யோசிக்கிறோம், மீண்டும் நம்மீது நாமே வெட்கப்படுகிறோம். அதாவது திரையரங்கில் நாம் செலவிடும் அந்த சில மணிநேரத்தில் நாம் மாயப் போர்வையில் முடங்கிக் கிடக்கிறோம். ஆனால், அதே சமயம் நம்முடன் படம் பார்த்த பெரும்பாலோர் அவ்வாறு உணர்ச்சிவசப்படுவதில்லை என்பதையும் அப்போதைக்கு நாம் கவனிப்பதில்லை.

உண்மை, நடிப்பு என்ற இரண்டையும் பகுத்தறிந்துகொள்ளும் பக்குவமே அந்த இரண்டு நிலைகளிலும் நாம்தான் கர்த்தா என்ற எண்ணத்திலிருந்து நம்மை விடுவிக்கும்.ஆனால் பகுத்தறிந்து கொள்வது என்பதைவிட அவை இரண்டின் மீதும் பற்றில்லாமல் இருப்பதுதான் ஒரு ஞானியின் குணாதி சயம். அந்தக் காட்சியை அவனுடைய கண்கள் பார்க்கின்றன என்றாலும், மனதை அந்தப் பார்வையுடன் அவன் செலுத்துவதில்லை, அதனால் அவன் உணர்ச்சி வசப்படவேண்டிய அவசியமும் இல்லை. அது மட்டுமல்லாமல் மனதை அவன் பார்வையோடு நிறுத்திவிடுகிறான். உள்ளே வர அனுமதிப்பதில்லை.

நம்மை எவ்வளவுதான் நாம் பரமாத்மாவோடு ஒன்றிணைத்துக்கொண்டாலும், நம் செயல்களின் விளைவுகள் அதாவது நாம் எண்ணிக்கொள்வதுபோல புண்ணிய – பாவங்கள் அந்தப் பரம்பொருளைப் போய்ச் சேருவதில்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ‘இனி கோபம் கூடாது’ என்று தீர்மானம் செய்துகொள்கிறாம். ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திலும் கோபம் நமக்கு முந்தி ஆஜராகி விடுகிறது.

ஏன்? கோபம் கூடாது என்று நினைப்பது நம்முடைய மேலோட்டமான மனது. ஆனால் கோபம் கொள்ள வைப்பதோ நம் ஆழ்மனது! இங்கே, ஆழ்மனதில் கோபம் நிறைய தேங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இது இறைக்க இறைக்க ஊறுகிறது! எவ்வளவு இறைத்தாலும் இது வற்றாததற்குக் காரணம், கோப ஊற்று அத்தனை ஆழமானது, வளமானது என்பதுதான். கோபப்பட்ட பிறகு அதற்காக நாம் வெட்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், அடுத்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் கோபப்படுவதை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

அதாவது இன்னது கூடாது என்று முடிவு செய்துகொண்ட பிறகும் மறுபடியும் அதையே செய்வானேன்? நாம் மாயையில் மூழ்கியிருப்பதால்தான். கோபத்தின் விளைவு பிறரைத் துன்புறுத்தினாலும், அந்தத் துன்பத்தில் நாம் மகிழ்கிறோமே இந்த வக்கிர சந்தோஷத்தால்தான். இந்த மாயைக்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். நாம் உறக்கத்தில் கனவு காண்கிறோம். ஒரு அப்பாவியை அடித்துத் துன்புறுத்துவதாக ஒரு கனவு.

பிறகு அந்த அப்பாவியிடம் தான் அவ்வாறு செய்ததற்காக மன்னிப்பு கேட்பதாக இன்னொரு கனவு. ஒன்று தீயது, மற்றது நன்மையானது. ஆனால் இரண்டுமே கனவுதான். தூக்கம் கலைந்தவுடன் அந்தக் கனவுகளும் மறைந்து விடுகின்றன. இரண்டுமே உண்மையல்ல. வெறும் காட்சிகள். தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்த பிறகும் சரி, அந்தக் கனவுகளால் எந்த பாதிப்பும் நமக்கு இல்லை. ஆனால் ஓர் உண்மை புலப்படுகிறது – பிறரைத் துன்புறுத்த வேண்டும் என்ற வக்கிர குணமும், அவ்வாறு செய்வது தவறு என்ற சாத்வீக குணமும் நம் ஆழ்மனதில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன!

பாம்பு கடித்து இறந்தவர்களைவிட, அது கடித்து விட்டதே, தாம் இறந்து விடுவோமே என்ற பயத்தில் இறந்தவர்கள்தான் அதிகம் என்பார்கள். எல்லோரும் திருமலையில் பெருமாளுக்கு சேவை புரிந்துவந்த அனந்தாழ்வாராகிவிட முடியுமா? அது என்ன சரித்திரம்?பெருமாளுக்கு அலங்காரம் செய்வதற்காக வழக்கம்போல நந்தவனத்தில் மலர்களைக் கொய்துகொண்டிருந்தார் அனந்தாழ்வார். கூடவே வேறு சில அடியார்களும் அதே போன்ற பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது கருநாகம் ஒன்று ஆழ்வாரின் பாதத்தைத் தீண்டிவிட்டு சரசரவென்று புதருக்குள் ஓடி மறைந்தது. அவ்வாறு நாகம் அவரைத் தீண்டியதைப் பார்த்த பிறர் ஓடோடி வந்து, ‘ஐயோ, கருநாகம் தீண்டிவிட்டதே, உடலுக்குள் விஷம் ஏறிவிடுமே, உடனே மருத்துவரைப் பார்க்கலாம், வாருங்கள்,’ என்று அவரிடம் கோரினார்கள்.

ஆனால் ஆழ்வாரோ மலர்ச் சிரிப்பு மங்காமல், ‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தீண்டிய கருநாகத்தின் விஷத்தால் நான் இறக்கவில்லை என்றால், இப்போது சேகரித்திருக்கும் மலர்களுடன் நான் பகவானை அவனது கர்ப்பகிரகத்தில் தரிசனம் செய்வேன். அல்லது விஷத்தால் நான் இறக்க நேர்ந்தால், நேராக வைகுந்தத்திற்கே சென்று பகவானை தரிசிப்பேன். அவ்வளவுதானே!’ என்று வெகு இயல்பாகக் கூறிவிட்டார்.

மற்றவர்கள் அவர் பக்தி கண்டு பிரமித்ததைவிட அவர் எந்த அளவுக்கு உண்மையையும், மாயையும் பாகுபடுத்திப் பார்க்கிறார் என்று அறிந்து வியந்ததுதான் அதிகம். பிறகு, அவர்தம் கூற்றுப்படியே மலர்களோடு மாலவனை கோவில் கருவறையில் தரிசித்தார் என்றுதான் இந்த நிகழ்ச்சி முடிகிறது!

ஆக, மாயையால் ஏற்படும் விளைவுகளை எப்படி பரமாத்மா ஏற்பார்? ஏனென்றால் மாயை என்பது உறக்கம்போல. உறக்கத்தில் தோன்றும் கனவுகள் எல்லாம் என்ன ஆகின்றன? பயங்கரமான கனவு காணும் ஒருவன் திடுக்கிட்டு விழிக்கிறான். அவ்வாறு கனவு கண்டதால் அவனுக்கு வியர்த்தும் இருக்கிறது. ஆனால் கனவு என்னவாயிற்று? அது எப்படிக் கரைந்து போனது? உண்மையில்லாத ஒன்று கனவாகத் தோன்றுவானேன்? கனவுக் காட்சிகள் எதுவுமே பொதுவாக நனவாவதில்லை, ஆனால் சில கனவுகள், பின்னால் நனவாகக்கூடிய சம்பவங்களுக்கு முன்னோடியாக அமைந்ததும் உண்டு.

இறைவன் கனவில் வந்ததாகவும், தனக்கு ஒரு கோவில் கட்டிக் கொடுக்கச் சொன்னதாகவும் சிலர் சொல்வதுண்டு. அவ்வாறு சொன்ன இறைவனின் உருவத்தை அவரால் நினைவில் வைத்திருக்க முடிந்ததா? இல்லை. அந்த உருவம் பெரும்பாலும் அவர் கோவில்களில் கண்ட மூர்த்தமாகவே இருந்திருக்கும். அல்லது வெறும் குரலாக இருந்திருக்கும். இந்தக் குரலும் அவருடன் பழகிய, பேசிய, உறவாடிய ஒரு குரலாகவே இருந்திருக்கும். இப்படி ஒருசிலவற்றை விலக்கி வைத்துப் பார்ப்போமேயானால், அனைத்துக் கனவுகளும் கலைந்துவிடுபவையாகவே இருக்கின்றன. ஏன், சில கனவுகள், நினைத்துப் பார்த்தாலும், மீண்டும் ஞாபகத்துக்கு வரமாட்டேன் என்கின்றன!

அடுத்தடுத்த நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ ஒரே நடிகர் வெவ்வேறு வேடங்களில் தோன்றுகிறார். அந்த நடிகரின் இயல்பான தோற்றம் ஒன்றுதான். வேடங்கள் எல்லாம் மாயை. அந்தத் திரைப்படத்தில் மிகவும் நல்லவனாக நடித்த அந்த நடிகர், இந்தப் படத்தில் ஏன் வில்லனாக நடித்தார் என்று கேட்கமுடியாது. அவர் எல்லா திரைப்படங்களிலுமே நல்லவனாகத்தான் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

உலகின் இயல்பும் இதுதான். எல்லாமே மாயை. இந்த மாயைக்குள் நாம் வாழ்ந்தாகத்தான் வேண்டும், தவிர்க்கவே முடியாது. ஆனால், இது வெறும் மாயைதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால் போதும். அதுதான் ஒரு ஞானியின் நிலை!

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 88 (பகவத்கீதை உரை) appeared first on Dinakaran.

Read Entire Article