திருவேங்கடநாதபுரம்

3 hours ago 1

* தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ் திருப்பதி மற்றும் காளஹஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.

* வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீநிவாச தீர்த்த கட்டம்.

* பைலர் பூஜித்தபோது தாமிரபரணி தாயுடனும், கோடி மலர்களுடனும் சேர்ந்து பிரகாசமாக திருவேங்கடநாதர் தோன்றினார். பூதேவி, ஸ்ரீதேவி, அலர்மேல்மங்கையுடன் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கினார் பைலர். அன்று முதல் இத்தலம் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

* வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீநிவாச தீர்த்த கட்டத்தில் மூழ்கி வணங்கினார். அசரீரியாக பெருமாள் ‘ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கு’ என்றார். நாயக்கரும் அன்னதானம் வழங்கி குழந்தை பேறு பெற்றார். நன்றிக் கடனாக, கோயிலை கட்டினார்; அந்த தலத்திற்கு வேங்கடநாதபுரம் என்று பெயரும் வைத்தார்.

* மூலவர் திருவேங்கடமுடையார் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார்.

* மூலவர் தவிர தனிச் சந்நதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் வீற்றிருக்கின்றனர். விஷ்வக் சேனருக்கும் தனிச் சந்நதி உண்டு.

* திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதாமலை, சாலிவாடீஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.

* குழந்தைப் பேறுக்காக உருளிப் பானையில் பொங்கலிட்டு தானம் செய்து அந்தப் பானையை கொடிமரத்தடியில் கவிழ்த்து வைக்கின்றனர். இதனால் விரைவில் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

* மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமான நெல்லிமரம் உள்ளது.

* திருப்பதி மலை வெண் கற்களால் ஆனது போலவே, சங்காணி மலை குன்றும் வெண் கற்களால் ஆனது.

* புரட்டாசி சனிக் கிழமை தோறும் கருடசேவை நடப்பது வழக்கமானதுதான்; ஆனால், பக்தர்கள் விரும்பி கேட்கும் நாட்களில்கூட இத்தலத்தில் கருடசேவை நடத்தப்படுகிறது.

* தெற்குப் பிராகாரத்தில் உள்ள வெண்கல கருடன் இரு புறமும் மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு – சக்கரத்துடன் அபூர்வமாகக் காணப்படுகிறார்.

* இத்தலத்தில் உள்ள கீழ் திருப்பதி வரதராஜப் பெருமாள். பிறகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர் புஜங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

* பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையுடன் காட்சியளிக்கிறார். இடதுபுற கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன.

* இவரை தனரேகை பெருமாள், வாழவைக்கும் பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாதாம்.

* பெருமாளின் கையில் தனரேகை காணப்படுவதால் இதை சுக்கிர தலம் என்பர்.

* காளஹஸ்திக்கு இணையான தலமாக இங்குள்ள சிவாலயம் விளங்குகிறது.

* கோத பரமேஸ்வரரும், அன்னை சிவகாமியும் சர்ப்பதோஷம், நாகதோஷம் நீக்குகின்றனர். தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடக்கின்றன. இத்தலத்திற்கு, நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.

ஜெயசெல்வி

The post திருவேங்கடநாதபுரம் appeared first on Dinakaran.

Read Entire Article