ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ ஒரே இடத்தில் படிக்கலாம் வேலையும் பார்க்கலாம்: மாணவர்கள், பணியாற்றுவோருக்கு ஒருசேர உதவும் அசத்தல் திட்டம்

2 weeks ago 2

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான குடும்பத்தினர் சமையல் அறை, ஒரு பெட்ரூம் அல்லது ஒரு சமையலறை, ஒரு பெரிய ஹால் போன்ற கட்டமைப்புடன் கூடிய வீடுகளில் வசித்து வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் வாடகையும் மிக அதிகம். உதாரணத்திற்கு கிராமப்புறங்களில் ரூ.3 ஆயிரம் கொடுத்து ஒரு வீட்டில் குடியிருக்க முடியும் என்றால், சென்னையில் அதே குடும்பத்தினர் குறைந்தது ரூ.7500 முதல் ரூ.10 ஆயிரம் வரை வாடகை செலுத்த வேண்டி இருக்கும். இதனால், பெரும்பாலான குடும்பத்தினர் அவர்களது குடும்ப வருமானத்திற்கு ஏற்ப வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது படிக்கும் மாணவ, மாணவிகளே. வீட்டில் உள்ள பெண்கள் டி.வி பார்க்கும்போது, வேறு வழி இல்லாமல் அதே அறையில் குழந்தைகளும் அமர்ந்து படிக்க நேரிடும். அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படிக்கும் போதும், நள்ளிரவு வரை படிக்கும்போதும் பல்வேறு இடையூறுகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளுக்கு கற்றல் சிதைவுகள் ஏற்படுகின்றன.

அதேபோல, கொரோனாவுக்கு பிறகு பல நிறுவனங்களில் “ஒர்க் ப்ரம் ஹோம்” எனும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் புதிய நடைமுறை அமலில் இருந்து வருகிறது. ஆனால் வீட்டில் அமர்ந்து கொண்டே அலுவலக வேலைபார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. குடும்பச் சூழ்நிலையில் அலுவலக வேலை என்பது பெரும் இடையூறாகவே இருக்கும். ஒரு பெட்ரூம், ஒரு ஹால் உள்ள வீடுகளில் பெட்ரூமில் அமர்ந்து ஒரு நாள் முழுவதும் கதவை சாத்திவிட்டு வேலை பார்ப்பது மிகச் சிரமமான பணி. குழந்தைகள் தொந்தரவு தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

இன்னும் பல நிறுவனங்களில் இன்றும் வீட்டிலிருந்துதான் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. இதுபோன்று பணியாற்றுவோர் பெரும்பாலும் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் இடையூறின்றி கல்வி கற்பதற்கு ஒரு இடம் தேவை, பணிபுரிபவர்கள் வீட்டை தவிர்த்து வெளியிடத்தில் அமர்ந்து பணிபுரிய ஒரு இடம் தேவை போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு தமிழகத்திலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட புதிய திட்டம்தான் முதல்வர் படைப்பகம் எனும் முன்னோடி திட்டம். சென்னை கொளத்தூரில் நேற்று இந்த முதல்வர் படைப்பகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் “பகிர்ந்த பணியிட மையம்” எனப்படும் “கோ ஒர்கிங் ஸ்பேஸ்” மற்றும் மாணவர்களுக்கான கல்வி மையம் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முதல்வர் படைப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த படைப்பகத்தில் யுபிஎஸ்சி, டிஎன்பிசி போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இங்கு வந்து படித்து பயன்பெறலாம். இவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் மாணவர்கள் எந்த இடையூறும் இன்றி படிக்கும் வகையில் அமைதியான சூழலும், நீண்ட நேரம் படிப்பதற்கு உகந்த இருக்கைகள், கணினி மற்றும் இணையதள வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 51 நபர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இந்த இடம் வசதியாக உள்ளது.

அதேநேரத்தில் வீட்டில் அமர்ந்து வேலை செய்ய முடியாத நபர்கள் தங்களது லேப்டாப் அல்லது தேவையான எழுதுபொருட்களை கொண்டு வந்து இந்த இடத்தில் அமர்ந்து பணிபுரியலாம். இதற்காக இக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 38 நபர்கள் முறையாக அமர்ந்து வேலை செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த கட்டிடத்தில் 3 கலந்தாய்வு கூடங்களும், அதில் 2 கூடத்தில் தலா 4 நபர்களும், ஒரு கூடத்தில் 6 நபர்களும் அமர்ந்து பேசும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2வது தளத்தில் உணவு அருந்துவதற்கான இடம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பணிபுரிவோர் பயன்படுத்திக் கொள்ளவும், முதல்தளத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் இடமும், 2வது தளத்தில் உணவருந்தும் இடமும் உள்ளன. படிக்கும் மாணவர்களுக்காக 5 ஷிப்ட் முறைகள் இங்கு வகுத்து தரப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும் என 5 ஷிப்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் படிக்கலாம்.

இதற்காக மாணவர்களுக்கு இரண்டரை மணி நேரத்திற்கு வெறும் ரூ.5 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே போன்று பகிர்ந்த பணியிடத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அரை நாள் கட்டணமாக ரூ.50ம், முழு நாள் கட்டணமாக ரூ.100ம், ஒரு மாத கட்டணமாக ரூ.2500ம் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள ஆலோசனை கூடங்களை பயன்படுத்திக் கொள்ள 4 இருக்கைகள் கொண்ட அறைக்கு ரூ.150ம், 6 இருக்கைகள் கொண்ட அறைக்கு ரூ.250ம், ஒரு மணி நேரத்திற்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முழுவதும் குளிர்சாதன வசதியுடன் நல்ல காற்றோட்டமாக இருக்கக் கூடிய இந்த இடத்தை கொளத்தூர் மட்டுமின்றி வடசென்னை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்திலேயே முதன்முறையாக கொளத்தூரில் தமிழக அரசின் சார்பில் இத்தகைய சிறப்பு வாய்ந்த முதல்வர் படைப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

* போட்டித்தேர்வு நூல்கள் தயார்
முதல்வர் படைப்பகத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், இங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள், செய்தித்தாள்கள், 10,12ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் என அனைத்து புத்தகங்களும் உள்ளன. லேப்டாப் கொண்டு வந்து மாணவர்கள் படிக்கலாம். இங்கு 3 கணினிகள் உள்ளன. மாணவர்கள் தேவைப்பட்டால் இலவச “வைபை” வசதியுடன் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு படிக்க வர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து ஷிப்டு நேரத்தின் அடிப்படையில் படிக்கலாம் என்றார்.

* வரவேற்கத்தக்க அரசின் செயல்
முதல்வர் படைப்பகத்தில் “கோவொர்கிங் பிரிவில்” அமர்ந்து பணிபுரியும் ஐ.டி ஊழியர் மதன்குமார் கூறுகையில், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அலுவலகம் அமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதேபோன்று வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் பணி செய்வதற்கான கட்டிடங்கள் தனியார் துறை சார்பில் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. ஆனால் முதல்முறையாக அரசு சார்பில் “கோவொர்கிங் ஸ்பேஸ்” எனப்படும் பணி செய்வதற்கான தளம் முதல்முறையாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

The post ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ ஒரே இடத்தில் படிக்கலாம் வேலையும் பார்க்கலாம்: மாணவர்கள், பணியாற்றுவோருக்கு ஒருசேர உதவும் அசத்தல் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article