சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: 11ம் தேதி கொள்ளிடத்தில் தீர்த்தவாரி

2 hours ago 1

சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. வரும் 11ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

இதில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு தைப்பூச திருவிழா இன்று (2ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மன் மரகேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன் எழுந்தருளினார். காலை 7.30 மணிக்கு தங்க கொடிமரத்தில் அம்மனின் திருஉருவம் வரையப்பட்ட துணியாலான கொடியை கோயில் குருக்கள் ஏற்றினர். தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்றிரவு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கு, இரவில் பூத வாகனம், மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மரயானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். 10ம் நாளான 11ம் தேதி காலை தைப்பூசத்துக்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடை உபயமாக நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடதிருகாவிரிக்கு சென்றடைகிறார். வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார்.

அன்று மாலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு 10 மணி முதல் 11 மணி வரை ரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதைதொடர்ந்து காலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று காலை 8 மணிக்கு வடகாவிரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழிநடை உபயங்களை கண்டருளி இரவு 11 மணிக்கு கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சேர்கிறார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருவிழா கொடி இறக்கப்படுகிறது.

The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் கோலாகலம்: 11ம் தேதி கொள்ளிடத்தில் தீர்த்தவாரி appeared first on Dinakaran.

Read Entire Article