ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் அத்தாணி சந்தையை மேம்பாடு செய்யும் பணியினை விரைந்து முடிக்க கோரிக்கை

2 hours ago 2

அந்தியூர் : அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அத்தாணி- பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வாரச்சந்தை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
வாரந்தோறும் வியாழக்கிழமை இயங்கும் வாரச்சந்தையில் காய்கறிகள்,பருப்பு வகைகள், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும்.

சவுண்டபூர், கணபதிபாளையம், கவுண்டன்புதூர்,அத்தாணி,குப்பாண்டம் பாளையம், கரட்டூர், கருவல்வாடிப்புதூர், கீழ்வாணி,மேவாணி,கொளத்தூர், கருப்ப கவுண்டன்புதூர், வரப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை இங்கு வாங்கி செல்வர்.

இந்த சந்தையில் அந்தியூர், பவானி, அத்தாணி கவுந்தப்பாடி கோபி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள்,காலணிகள், துணிமணிகள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவர்.

பல ஆண்டுகளாக திறந்தவெளியில் வெயிலிலும் மழையிலும் தார்பாய்கள் கட்டி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர். இவர்களது கோரிக்கையின் பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அத்தாணி வார சந்தை ரூ.2 கோடி 65 லட்சம் மதிப்பில் சந்தை மேம்பாட்டு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதில் மேற்கூரியுடன் கூடிய வணிக வளாக கடைகள் தற்போது கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ந்தேதி துவங்கப்பட்ட பணிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும். தற்போது ஆறு மாதங்கள் ஆன நிலையில் சந்தை மேம்பாட்டு பணிகள் 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக வார சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தரையில் கடை விரித்து, இட நெருக்கடியில் தங்களது பொருட்களை விற்று வருகின்றனர்.எனவே சந்தை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடித்து சந்தைக்கு வரும் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடர்பாடின்றி பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் அத்தாணி சந்தையை மேம்பாடு செய்யும் பணியினை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article