ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் முதல் சாஸ்தா கோவில் வரை உள்ள சாலை ரூ.2.50 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. ராஜபாளையம் அருகே தேவதானத்தில் இருந்து சாஸ்தா கோவில் சாலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா, பலா, வாழை, கொய்யா போன்ற விவசாயமும் நடைபெற்று வருகின்றது. இச்சாலையில் தென் தமிழகத்தின் பஞ்சபூத ஸ்தலத்தில் வாயு ஸ்தலமாக அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தவம் பெற்ற நாயகி கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி, செவ்வாய் உட்பட பல்வேறு திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக தேர்த்திருவிழாவும் நடத்தி வருகின்றனர்.
குறுகிய சாலையான இதில் நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விளைபொருட்களை நான்கு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், டூவீலர்கள் ஆகியவற்றில் கொண்டு செல்லும் பொழுது விபத்துகளில் சிக்கி வந்தனர். மேலும் தேர் திருவிழாவின் போது கோவில் தேரினை ஊருக்குள் கொண்டு வருவதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குறுகிய சாலையை விரிவுபடுத்தி தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர். அதனடிப்படையில் தேவதானம் சாஸ்தா கோவில் சாலையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையிட்ட கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி உடனடியாக பாதையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில் உதவி கோட்ட பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவி பொறியாளர் உமாதேவி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்தனர். சுமார் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலையை விரிவாக்கும் பணியினை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து ஐந்து மாதங்கள் நடைபெற்று வந்த விரிவாக்க பணி நிறைவடைந்து பொதுமக்கள், விவசாயிகள், பக்தர்கள் பயன்பாட்டிற்காக சாலை திறந்து விடப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post ரூ.2.50 கோடியில் விரிவாக்கம்; தேவதானம் சாலை பயன்பாட்டிற்கு திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.