தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயிலில் பிரேக் பழுது: பயணிகள் திண்டாட்டம்

6 hours ago 4

தாம்பரம், மே 22: தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் திடீரென்று ஏற்பட்ட பிரேக் பழுதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் பயணிகளுடன் சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் மின்சார ரயில் புறப்பட இருந்த நிலையில், ரயிலின் பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டு மின்சார ரயிலின் 6வது பெட்டியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தனர். ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பழுது காரணமாக பின்னால் வந்த ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் தாம்பரம் – சென்னை கடற்கரை மார்க்கத்தில் சுமார் அரை மணி நேரம் ரயில் சேவை பாதித்தது. பழுது சரி செய்யப்பட்டு மின்சார ரயில் அரை மணிநேரம் தாமதமாக சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் அருகருகே நிற்பது என்பது சாதாரணமான ஒன்று. ஒரே தண்டவாளத்தில் ஒரு ரயில் நிற்கும்போது அந்த ரயில் நிற்கும் இடத்திலிருந்து எவ்வளவு மீட்டர் தூரத்தில் மற்றொரு ரயிலை நிறுத்த வேண்டும் என ரயிலை இயக்குபவர்களுக்கு தெரியும். வழக்கமாக இதுபோன்ற பழுது, சிக்னல் கோளாறு ஏற்படும் பட்சத்தில் ஒரே தண்டவாளத்தில் அருகருகே ரயில்கள் நிறுத்தப்படும். பயணிகள் இதுகுறித்து தெரியாமல் பதற்றம் அடைந்தனர். ரயிலில் பழுது ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்த உடனே அங்கு சென்று 20 நிமிடத்திற்குள் பழுது சரி செய்யப்பட்டதால் மீண்டும் வழக்கம் போல் ரயில் சேவை தொடங்கியது’’ என்றனர்.

The post தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயிலில் பிரேக் பழுது: பயணிகள் திண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article