15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தது

7 hours ago 4

சென்னை, மே 22: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு தற்போது 70 கன அடியாக வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு-கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் திறக்கவேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு திறக்காததால், தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என கடிதம் எழுதினர்.

இதையடுத்து, தமிழக அதிகாரிகளின் கோரிக்கை ஏற்று, கடந்த மார்ச் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்பின்னர், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீ கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு கடந்த மார்ச் 28ம் தேதி வந்தடைந்தது. இந்நிலையில், கண்டலேறு அணையில் கூடுதலாக 300 கன அடி வீதம் 800 கன அடியும் படிப்படியாக உயர்த்தி தற்போது 1340 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 316 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்துகொண்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் ஆந்திரா பகுதியில் கால்வாய் பணி நடைபெறுவதால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதுவரை பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி (அரை டிஎம்சி) தண்ணீர் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5ம்தேதி பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாட்களில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆந்திர பகுதியில் சீரமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் அதிகளவு வந்தால் மீண்டும் கால்வாய் சேதம் அடையும் என்பதால் 500 கன அடி மட்டுமே திறக்கப்பட்டது.

ஆந்திர விவசாயிகள், குழாய் மூலம் தண்ணீரை உறிஞ்சுவதாலும் தண்ணீர் அளவு குறைந்ததாலும் 15 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 7 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தது. இந்த தண்ணீரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் ராஜா சிதம்பரம், உதவி பொறியாளர்கள் சதீஷ் குமார், பரத் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். கண்டலேறு அணையில் இருந்து நேற்று முன்தினம் முதல் 2500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஜீரோ பாயிண்டில் 70 கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

The post 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தது appeared first on Dinakaran.

Read Entire Article