ரூ.1000 கோடியில் ஏஐ மையங்கள் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய அரசு: டெல்லி, ரூப்நகர், கான்பூருக்கு வாய்ப்பு

4 months ago 17

புதுடெல்லி: ஏஐ மையங்கள் அமைப்பதில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மீண்டும் புறக்கணித்து உள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆக.30 அன்று கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழ்நாட்டில் ஏஐ ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டார்.

ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் ஏஐ கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன ஏஐ திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த அவர் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏஐ மையங்களில் ஏதாவது ஒன்று தமிழ்நாட்டிற்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் சுகாதாரம், வேளாண்மை, நிலையான நகரங்களை மையமாகக் கொண்ட 3 ஏஐ மையங்கள் குறித்த ஒன்றிய அரசின் அறிவிப்பில் தமிழ்நாடு இடம் பெறவில்லை. மாறாக சுகாதாரத்திற்கு டெல்லி ஐஐடி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மூலமும், விவசாயத்திற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஐஐடி ரூப்நகரும், நிலையான நகரங்கள் குறித்த ஆய்வுக்கான மையத்திற்கு ஐஐடி கான்பூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.

இதனால் தமிழ்நாட்டை மீண்டும் ஒன்றிய அரசு புறக்கணித்து உள்ளது தெரிய வந்துள்ளது. 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை மொத்தம் ரூ.990 கோடி நிதியை இந்த மூன்று மையங்களை உருவாக்க ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. இந்த பணியை மேற்பார்வையிட, சோகோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தர் வேம்பு தலைமையில் தொழில்துறை கனரக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post ரூ.1000 கோடியில் ஏஐ மையங்கள் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய அரசு: டெல்லி, ரூப்நகர், கான்பூருக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article