12 தாலுகா அலுவலகங்ககளில் ஜமாபந்தி தொடங்கியது கலெக்டர் பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டத்தில்

7 hours ago 2

திருவண்ணாமலை, மே 17: திருவண்ணாமலை தாலுகாவில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைவு நாளன்று விவசாயிகள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், போளூர் தாலுகாவில் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. சேத்துப்பட்டு தாலுகாவில் செய்யாறு உதவி கலெக்டர் தலைமையில் வரும் 22ம் தேதி வரையிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் திருவண்ணாமலை ஆர்டிஓ தலைமையில் வரும் 21ம் தேதி வரையிலும், ஆரணி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வரும் 23ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறும்.

மேலும், கலசபாக்கம் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) தலைமையில் வரும் 21ம் தேதி வரையும், செங்கம் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைைமயில் வரும் 23ம் தேதி வரையும், வெம்பாக்கம் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் வரும் 23ம் தேதி வரையும், செய்யாறு தாலுகாவில் பழங்குடியினர் நல திட்ட இயக்குநர் தலைமையில் வரும் 29ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறும். மேலும், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் வரும் 21ம் தேதி வரையும், வந்தவாசி தாலுகாவில் கலால் உதவி ஆணையர் தலைமையில் வரும் 29ம் தேதி வரையும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையில் வரும் 20ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறும்.

மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட அளவிலான மற்றும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவை வரும் 29ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டம் வழக்கம் போல 19ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தி விழாவில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.ராஜசேகரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது தாசில்தார்கள் துளசிராமன், பெருமாள் உடனிருந்தனர்.

செய்யாறு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி விழாவில் மாவட்ட பழங்குடியினர் நலம் திட்ட அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது தாசில்தார் அசோக்குமார் உடனிருந்தனர்.
கலசபாக்கம் வட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரன் தலைமையில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சி செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தச்சாம்பாடி பிர்காவை சேர்ந்த சேத்துப்பட்டு, தச்சாம்பாடி, இந்திரவனம், உலகம்பட்டு, அப்பேடு,தேவி மங்கலம், உள்பட 16 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

The post 12 தாலுகா அலுவலகங்ககளில் ஜமாபந்தி தொடங்கியது கலெக்டர் பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article