புனே: ரூ.10 லட்சம் வைப்பு தொகை கேட்டதால் இரட்டை குழந்தைகளை ெபற்றெடுத்த பெண் பலியான விவகாரத்தில், புனே மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்சி அமித் கோர்கேவின் உதவியாளரின் மனைவி தனிஷா பிசே நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் புனேவின் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமங்கள் இருந்ததால், வைப்பு தொகையாக ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டது. மேலும் அவரை தங்களது மருத்துவமனையில் தங்கி பிரசவம் பார்க்க அனுமதி மறுத்தனர். அதையடுத்து பிரசவ வலியில் துடித்த தனிஷா பிசேவை, மற்றொரு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு அந்தப் பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பெண் இறந்தார். அதனால் குடும்பத்திரும், நண்பர்களும் ஆத்திரமடைந்தனர். இதுதொடர்பான வீடியோவை பாஜக எம்எல்சி அமித் கோர்கே வெளியிட்டார். மேலும் புனேவின் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். இதற்கிடையே புனேவின் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்கள், ரூ. 10 லட்சம் வைப்புத் தொகை கேட்ட மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘புனேவின் மருத்துவமனை இணை ஆணையர் தலைமையில் குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அதேநேரம், வைப்புத்தொகை செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அதனால் அந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பதிலளித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், ‘மக்களின் போராட்ட உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். பொதுமக்கள் அமைதியாக இருந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இவ்விவகாரம் தொடர்பாக சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் உட்பட கட்சிகள் மற்றும் அமைப்புகள் மருத்துவமனையின் நுழைவு வாயில் பலகையில் கருப்பு வண்ணம் பூசி போராட்டம் நடத்தினர். பின்னர், அலங்கார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருத்துவமனையை சேதப்படுத்திய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
The post ரூ.10 லட்சம் வைப்பு தொகை கட்டினால் தான் அனுமதி; இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பலி: மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.