
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர் 100 நாள் திட்டத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கவிதாவுக்கு ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், நீங்கள் 1 கோடியே 67 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையை சேர்ந்த தர்ஷினி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ளீர்கள். உரிய வரி செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கூலித்தொழிலாளி கவிதா தனது, பான் கணக்கு எண் மூலம் மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூலித்தொழிலாளிக்கு ரூ.1.67 கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தக்கோரி நோட்டீஸ் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.