
சட்டோகிராம்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 227 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 67 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 87 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் 64 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வங்காளதேசம் தரப்பில் ஷத்மான் இஸ்லாம் சதம் (120 ரன்) அடித்து அசத்தினார்.
மெஹதி ஹசன் மிராஸ் 16 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் 5 ரன்னுடனும் களத்தில்இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் வின்சென்ட் மசேகேசா 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 444 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 217 ரன் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, வங்காளதேச அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக ஜிம்பாப்வே தனது 2வது இன்னிங்சில் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பென் கர்ரன் 46 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் வங்காளதேசம் சமன் செய்தது.