
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ். இவர் சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால், ஆக்சன், பீரியட் டிராமாக்களில் இருந்து விலகி, தற்போது ஹாரர் காமெடி பக்கம் திரும்பி இருக்கிறார். வருண் தேஜ், இந்தோ-கொரிய திகில்-காமெடி படமான விடி15 படத்தில் நடிக்கிறார்.
இதில், கொரியன் கனகராஜு என்ற கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். ஹாய் நானா பட நடிகை ரித்திகா நாயக் கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் ஜாம்பி ரெட்டி பட நடிகை தக்சா நகர்கர் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அவற்றில் ஒன்றில் மேக்கப் அறையின் கண்ணாடி முன்பு அமர்ந்து செல்பி எடுப்பது போன்றும், மற்றொன்றில் வேனிட்டி வேனில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் என்று தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதும் தெரிகிறது.
இதன் மூலம் அவர் இப்படத்தில் இணைந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், எந்த காதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியாதநிலையில், சிறப்பு பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
