
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:-
சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்தி காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம்.
11 ஆண்டுகளுக்கு பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. 4 சாதிகளே இருப்பதாக கூறி வந்த மோடியின் அறிவிப்பிற்கு பின்னால் என்ன உள்ளது என தெரியவில்லை. பல முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும். 50% உச்ச வரம்பை நீக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதனை நேர்மை ஆகவும் வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு நடத்த வேண்டும். இதற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம். அதாவது எப்போது சாரி கணக்கெடுப்பு தொடங்கி முடிக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் மூலம் நாட்டிலுள்ள 90 சதவீதம் மக்கள் அதிகார பலத்தை பெறுவார்கள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பில், முன்னோடியாக தெலுங்கானா மாநிலம் உள்ளது. இதனை எப்படி நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்கான செயல் திட்டம் அம்மாநிலத்திடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த தெலுங்கானா, பிகார் என இரு மாநிலங்கள் உதாரணங்களாக உள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்றார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பதில் அளித்த ராகுல்காந்தி,
28 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை தெளிவாக இருக்க வேண்டும், எந்த குழப்பமும் இல்லாமல் வலுவாக இருக்க வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது இவ்வாறு அவர் கூறினார்.