![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38106647-sensex.webp)
மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டது. ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருக்கிறது. இது சந்தையில் நேர்மறையான வர்த்தகத்திற்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வட்டி விகிதக் குறைப்பு சந்தைகளில் பெரிய அளவில் ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெளிநாட்டு நிதி தொடர்ச்சியாக வெளியேறியதாலும், முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டதாலும் இன்று பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவுடன் முடிவடைந்தன. இதன்மூலம் மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 197.97 புள்ளிகள் சரிந்து 77,860.19 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 43.40 புள்ளிகள் சரிந்து 23,559.95 புள்ளிகளாக இருந்தது.
செக்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் ஐடிசி நிறுவன பங்குகள் 2 சதவீதம் அளவுக்கு சரிந்தன. இதேபோல் ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் பின்தங்கின.
டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 4 சதவீதம் உயர்வடைந்தன. இதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5 மடங்குக்கும் மேலாக உயர்ந்து ரூ.16,134.6 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்தன. சொமாட்டோ, மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் லாபம் ஈட்டின.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 2,402 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன, 1,520 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. 142 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ சரிவுடன் முடிவடைந்தன. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரேப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவடைந்தன. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.73 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு 74.83 டாலராக உள்ளது.