சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவோம் - பாக்.பயிற்சியாளர் சவால்

3 hours ago 1

லாகூர்,

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்திருந்தாலும், அவர் இந்த தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியின்போது முதுகு பகுதியில் பும்ரா காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தரமான பவுலர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார். அதே சமயம் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் டாப் அணிகள் குறிப்பிட்ட வீரரை மட்டும் சார்ந்திருக்காது என்று கூறியுள்ளார். மேலும் பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணி பும்ராவின் பிட்னஸ் பற்றி கவலைப்படுவார்கள். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்த வரை மிகவும் அழகான விஷயம் என்னவெனில் நீங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உலகின் டாப் 8 அணிகள் மட்டுமே அதில் விளையாடும். அதில் பும்ரா போன்ற பவுலரை கொண்டிருந்தால் அது எந்த அணிக்கும் போனஸ் பாயிண்ட் போல இருக்கும். ஆனால் அதற்காக அவரைச் சுற்றி மட்டுமே நாங்கள் அனைத்து திட்டங்களையும் வகுப்போம் என்று அர்த்தமல்ல. அவர் இருந்தாலும் இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும்" என்று கூறினார்.

Read Entire Article