ரிங் ரிங் - திரைப்பட விமர்சனம்

1 week ago 2

சென்னை,

'ரிங் ரிங்' என்பது சக்திவேல் செல்வகுமார் எழுதி இயக்கிய திரைப்படமாகும். இப்படத்தில் விவேக் பிரசன்னா மற்றும் சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜமுனா, அர்ஜுனன் மற்றும் டேனியல் அன்னி போப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இசைப் பேட்டை வசந்த் இசையமைத்துள்ள இப்படத்தை தியா சினி கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. செல்போனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சக்திவேல் செல்வகுமார் எழுதி இயக்கிய 'ரிங் ரிங்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பிரவீன் ராஜா, விவேக் பிரசன்னா, டேனியல், அர்ஜுனன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். பிரவீன் ராஜா பிறந்த நாள் விருந்தில் மற்ற மூவரும் மனைவியருடன் பங்கேற்கின்றனர். அப்போது தங்கள் செல்போன்களை மேஜை மேல் வைத்து, யாருக்கு அழைப்பு வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட்டு பேச வேண்டும் குறுந்தகவலை எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விளையாடுகின்றனர்.

சில பெண்களிடம் இருந்து ஆபாச அழைப்புகள் குறுந்தகவல்கள் வருகின்றன. இதனால் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சினை, பிளவுகள் என்ன? அதில் இருந்து மீண்டார்களா? என்பது மீதி கதை. 

விவேக் பிரசன்னா தனது செல்போனை நண்பனிடம் தள்ளி அதில் வரும் ஆபாச படங்களுக்கு அவனை பொறுப்பேற்க வைப்பது. பிறகு நண்பணுக்கு வரும் தகாத அழைப்பில் சிக்கி தடுமாறுவது என்று நடிப்பை நேர்த்தியாக முகத்தில் கடத்தி உள்ளார். இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து காதலியிடம் சிக்கி விழிபிதுங்கும் டேனியல் காட்சிகளை கலகலப்பாக நகர்த்தி உதவி உள்ளார்.

பிரவீன் ராஜா அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளார். மனைவி நலனுக்காக அவர் செய்யும் காரியம் நெகிழ வைக்கிறது. சாக்சி அகர்வால் பார்வையாலேயே உணர்வுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி அபாரமான நடிப்பை வழங்கி உள்ளார். கிளைமாக்சில் கணவரின் பேரன்பை உணர்ந்து உருகி பார்வையாளர்களையும் கலங்க வைக்கிறார்.

அர்ஜுன், ஸ்வம் சித்தா, ஜமுனா, சஹானா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நேர்த்தி. பெரும்பகுதி கதை ஒரே இடத்தில் முடங்கி இருப்பது பலகீனம். வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை பிரசாந்த் கேமரா நேர்த்தியாக படம்பிடித்துள்ளது. கதைக்கு தேவையான பின்னணி இசையை வழங்கி உள்ளார் வசந்த்.

தம்பதியினரின் செல்போன் ரகசிய விபரீதங்களை வைத்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

 

Read Entire Article