![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39354962-7.webp)
திருச்செந்தூர்,
ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று சுவாமி மலையில் சாமி தரிசனம் செய்து விட்டு, திருச்சியில் இருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார்.
பின்னர் பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய நினைத்தேன். அது இப்போதுதான் முழுமையாக நிறைவேறி இருக்கிறது. சுவாமிமலை, திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளேன். இன்னும் 4 கோவில்களில் வழிபட உள்ளேன்.
தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் நல்லது நடக்கட்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வந்துள்ளேன். அரசியலுக்கு வந்த பின்னர் கோவில்களுக்கு வரமுடியவில்லை. முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு அரிய வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தபோது ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து இருந்தேன். தமிழ்நாட்டு அரசியலுக்கு யார் வந்தாலும் சரி, நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்." இவ்வாறு அவர் கூறினார்.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.