ராமேஸ்வரம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைகிறது ரூ.1,000 கோடியில் புதிய பைபாஸ் சாலை

1 day ago 2

Rameswaram,cochin,national Highways உசிலை, ஆண்டிபட்டியில் ஊருக்குள் செல்லவேண்டாம்
 பத்து ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்காது

மதுரை : ராமேஸ்வரம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நகர பகுதிகளை இணைக்காதவாறு ரூ.1,000 கோடியில் புதிதாக பைபாஸ் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது.

இச்சாலையில் மதுரை – ராமநாதபுரம் மார்க்கத்திலும், மதுரை – தேனி மார்க்கத்தில் உசிலம்பட்டி துவங்கி நாகமலை புதுக்கோட்டை வரையிலும், நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்சாலை அமைக்கப்பட்டபோது ஊரக பகுதிகளாக இருந்த மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகள், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வரையிலான பகுதிகள் நகரமயமாக்கல் காரணமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளாக வளர்ந்து வருகின்றன.

இதனால், சம்பந்தப்பட்ட பகுதிகளை கடந்து செல்லும்போது பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க பழைய பைபாஸ் சாலையை விரிவாக்கம் செய்வது அல்லது ஏற்கனவே உள்ள சாலைக்கு நிகராக புதிய பைபாஸ் சாலை அமைப்பது ஆகிய பணிகள் இச்சாலையை பராமரிக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவால் நடந்து வருகின்றன.

இதன்படி, சம்பந்தப்பட்ட சாலையில் மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை துவங்கி முடக்குச்சாலை சந்திப்பு வரை விரிவாக்கம் செய்வதில் விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் நில ஆர்ஜித பிரச்னைகள் எழுந்ததால் அதை தவிர்க்க, முடக்குச்சாலை சந்திப்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஊர்ப்பகுதிக்குள் நுழையாமல் சென்றுவர புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.260 கோடியில் நடந்து வருகின்றன.

இப்பணிகளுடன் சேர்த்து, கொச்சி சாலை பயணிக்கும் திசையில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் ஊருக்குள் செல்லாத வகையில் மாற்றுச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாகமலை புதுக்கோட்டை முதல் முடக்குச் சாலை வரை அமைக்கப்படும் புதிய பைபாஸ் சாலையை போலவே, தேனியை தவிர்த்து கொச்சி சாலையில் மற்ற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் செல்லாத வகையில் புதிதாக பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. பெரும்பாலும் விவசாய நிலங்கள், குடியிருப்புகளை பாதிக்காத வகையில் இச்சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மதிப்பீட்டின்படி ரூ.1,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விரிவான அறிக்கை ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைத்து நிதி ஒதுக்கப்பட்டபின், சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும். இச்சாலை அமைக்கப்பட்டால் கொச்சி சாலையில் தமிழக எல்லை பகுதிக்குள் அடுத்த பத்தாண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் பெரியளவில் குறையும்’’ என்றனர்.

The post ராமேஸ்வரம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைகிறது ரூ.1,000 கோடியில் புதிய பைபாஸ் சாலை appeared first on Dinakaran.

Read Entire Article