இந்தூர்: தேர்வு மைய மின் தடை பிரச்னையால் நீட் தேர்வு முடிவு வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்த நிலையில், அந்த தடையை மத்திய பிரதேச ஐகோர்ட் மாற்றியமைத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 4ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது, மோசமான வானிலை காரணமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சில தேர்வு மையங்களில் ஒரு முதல் இரண்டு மணி நேரம் மின்சார விநியோகம் தடைபட்டது. அதனால் ேதர்வெழுத சென்ற மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் அன்றைய தினம் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேர்வு எழுத வேண்டியிருந்ததாகவும், இது அவர்களின் செயல்திறனைப் பாதித்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் மாணவி ஒருவர், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வரும் 15ம் தேதி வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதித்தார். தொடர்ந்து கடந்த 16ம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘இந்தூரில் உள்ள 11 மையங்களில் மட்டுமே மின்தடை பிரச்னை இருந்தது. நாடு முழுவதும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது தேவையற்றது’ என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுபோத் அப்யங்கர், பாதிக்கப்பட்ட தேர்வு மையங்களைப் பற்றிய விரிவான அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அடுத்த விசாரணை வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாற்றப்பட்ட இடைக்கால உத்தரவால், நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய 21 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு வழிவகுக்கும். ஆனால் இந்தூரில் மின்தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மறுதேர்வு கோரி மீண்டும் மனு செய்ய வாய்ப்புள்ளது.
The post நீட் முடிவு வெளியிட தடை விதித்த நிலையில் இடைக்கால தடையை மாற்றியமைத்த ஐகோர்ட்: தேர்வு மைய மின் தடையால் புது பிரச்னை appeared first on Dinakaran.