சென்னை: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதாக சமீபத்தில் ராமதாஸ் அறிவித்தார். இதனையடுத்து ராமதாசை விமர்சித்து பாமக பொருளாளர் திலகபாமா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராமதாசை விமர்சித்த பாமக பொருளாளர் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கூறி பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக் குடியினம். பெண்களுக்கு தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாசின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.
அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாசை வசைபாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவதுதான் அவருக்கு நல்லது.
ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கிவரும் ராமதாசை நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
The post ராமதாசை விமர்சித்த திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும்: பாமக பொதுச்செயலாளர் காட்டமான அறிக்கை appeared first on Dinakaran.