யோகங்கள் என்பதே கிரகங்களின் இணைவுதான். இந்த கிரகங்கள் இணைவுகள்தான் நிகழ்வுகளை செய்கின்றன. ஒரு ஜாதகருக்கான சூழ்நிைலயை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதும் அல்லது இருக்கின்ற நிலையில் மாற்றமடையச் செய்வதும் கிரகங்கள்தான் என்றால் மிகையில்லை. பல நேரங்களில் கிரகங்களுக்கும் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கும் ஒரு புரியாத நிலை உள்ளதே என்ற குழப்பம் எழலாம். ஆனால், அந்த சூழ் நிலையை உருவாக்குவதும் அந்த சூழ்நிலையிலிருந்து ஒருவரை விடுவிப்பதும் கிரகங்களின் அமைப்புகள்தான். அது திசா – புத்தியாக இருக்கலாம் அல்லது கோட்சார நிகழ்வாக இருக்கலாம். இதனுடன், ஒரு ஜாதகரின் பூர்வபுண்ணியமும், பாக்கியமும் இணைந்து என்ன கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. கௌரி என்பது முப்பெரும் தேவிகளில் பார்வதி தேவியை குறிக்கிறது. அதாவது, அண்டச் சராசரங்களின் சக்தியை (இறைவி) குறிப்பதாகும். சிவத்தின் வலிமை சூரியன் என்றால், இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குபவள் சக்திதான். சக்தியின் வலிமை நிச்சயம் சந்திரன்தான். ஜோதிடத்தில் சந்திரனைப் பற்றி அதிகம் பேசப்படுவதற்கான காரணங்கள் நிச்சயம் உண்டு. காரணம், பூமியின் துணைக் கோளாக சந்திரன் வருகிறது. இதுவே, பூமியின் கருவறை எனலாம். நம் வழக்கத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘நாள் செய்யாததை நல்லோர்கள்கூட செய்யமாட்டார்கள்.’ சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பல யோகங்கள் உள்ளன. அதில் குறிப்பாக, கௌரி யோகம் பற்றி காண்போம்.
கௌரி யோகம் என்பது என்ன?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் கேந்திரம் என்று சொல்லக்கூடிய (1, 4, 7, 10) இடங்களிலோ அல்லது திரிகோணங்களில் (1, 5, 9) இடங்களில் வலிமையாக அதாவது, ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ, வளர்பிறை சந்திரனாக இருந்தாலும் அல்லது அதனுடன் சுபகிரகங்கள் என்று சொல்லக்கூடிய புதன், வியாழன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பார்வையோ இருந்தாலும், இது கௌரி யோகம் எனச் சொல்லப்படுகிறது. இதில், சந்திரனே லக்னாதிபதியாக இருந்து ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது இன்னும் யோகத்தின் உச்ச நிலை என்றும் சொல்லலாம்.
கௌரி யோகத்தின் பலன்கள் என்ன?
* நல்ல தோற்றப் பொலிவுடன் இருக்கப் பெற்றவராக காணப்படுவார்.
* சமூகத்தில் நல்ல மதிப்புடன் இருக்கப் பெற்றவராக இருப்பார் என்பது நிச்சயம். ஏதோ ஒரு வகையில் இவரால் சமூகத்திற்கு நல்ல சிந்தனைகளும் கருத்துகளும் பகிரப்படுபவராக இருப்பார்.
* பொருளாதாரம் சிலருக்கு சிறப்பாகவும்; சிலருக்கு மோசமாக இல்லாமல் தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொள்ளக்கூடிய நல்ல நிலையில் இருக்கும்.
* எதையும் சந்திக்கக்கூடிய நல்ல மனோதிடத்தை உடையவர் என்றால் மிகையில்லை. பயம் வரும் போகும். ஆனால், பயத்திற்கான காரண காரியத்தை தெளிவாக அறிந்து வைத்திருப்பார். இதுவே இங்கு சந்திரனின் வலிமையைச் சொல்கிறது.
* குடும்பத்தினருடன் இணக்கமாகவும் ேதவையானவற்றை தேவையான நேரத்தில் செய்யும் நபராக இருப்பார்.
* ஒரு சூழ்நிலையை எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை இவருக்கு உண்டு.
* சிலருக்கு இது எதிர்காலத்தில் நடக்கும் என்ற உள்ளுணர்வு உண்டாகும். அந்த நிகழ்வுகள் திடீரென ஆச்சர்யங்களை ஏற்படுத்தும்.
* சிலருக்கு கேந்திரத்திற்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெறும் பொழுது பல திறமைகள் கொண்ட நபராகத் திகழ்வார்.
* சிலர் படிக்காவிடிலும் வாழ்வின் அனுபவத்தில் பல சாஸ்திரங்களையும் படிப்பை தாண்டிய அனுபவ ஆராய்ச்சிகளிலும் வாழ்வின் சூட்சுமங்களை நுட்பமாக அறிந்து கொள்ளும் திறமை படைத்தவராக இருப்பார்.
* மற்றவர்களின் மனம் நோகும்படியான காரியங்களை செய்வதில் அச்சம் கொள்வார். அப்படியே அறியாமல் தெரியாமல் நடந்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்களாக இருப்பர்.
* இவர்கள் எங்கிருந்தாலும் உணவிற்காக சிந்திக்க மாட்டார்கள். இவர்களைத் தேடி உணவு வரும்.
லக்னங்கள் அடிப்படையில் சிறப்பான கௌரி யோகம்!
* மேஷ லக்னத்திற்கு 4ம் அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெறுவதும், 10ல் சந்திரன் அமர்வதும், பாவகத்தில் இருப்பதும் சிறப்பான யோகம்.
* சிம்ம லக்னத்திற்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவது சிறப்பான கௌரி யோகம் ஆகும்.
* துலாம் லக்னத்திற்கு 10ம் அதிபதி 10ல் அமர்வது சிறப்பான யோக அமைப்பாகும். சந்திரன் கேந்திரத்தில் ஆட்சி பெற்று அமைவது சிறப்பான கௌரி யோகமாகும்.
* விருச்சிக லக்னத்திற்கு 9ம் அதிபதி 7ல் உச்சம் பெறுவது சிறப்பான கௌரி யோகம் ஆகும்.
* கும்ப லக்னத்திற்கு 4ல் சந்திரன் உச்சம் பெறுவது சிறப்பான கௌரி யோகம்.
கௌரி யோகம் மேம்பட என்ன செய்யலாம்?
* வரியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உணவு தானம் செய்யலாம்.
* பௌர்ணமி விரதம் இருக்கலாம், பௌர்ணமி அன்று சந்திரனுக்கு பால் வைத்து வழிபாடு செய்வது சிறப்பை தரும்.
* மூன்று நதிகளில் சங்கமிக்கும் இடங்களில் நீராடுவது, அந்த நதியை வழிபடுவது சிறப்பைத் தரும்.
* மற்றவர்களின் மனங்களை, சங்கடங்களை ஏற்படுத்தும் சொற்களை பேசாமல் அல்லது செயல்களால் செய்யாமல் இருப்பது நலம் பயக்கும். மௌனம் சிறந்த தவம் என்பது உண்மை.
* வெள்ளியில் முத்து வைத்த ரத்தினங்களை அணிந்து கொள்வது சிறப்பான நற்பலன்களை கொடுக்கும்.
* திங்கட்கிழமை மாலை வேளையில் கோயிலில் அம்பாளை தரிசனம் செய்வது சிறப்பாகும்.
The post வாழ்வில் வளம் சேர்க்கும் கௌரி யோகம் appeared first on Dinakaran.