நட்சத்திரங்கள்;
பலன்கள்;
பரிகாரங்கள்…
கால புருஷனுக்கு இருபத்தி மூன்றாவது (23) நட்சத்திரம் அவிட்டம். இந்த நட்சத்திரம் உடைபட்ட நட்சத்திரம் ஆகும். அவிட்டம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், 2ம் பாதம் மகர ராசியிலும் 3ம் பாதம் மற்றும் 4ம் பாதம் கும்பத்தில் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் தனிஷ்டா என்ற சொல் அவிட்ட நட்சத்திரத்தை குறிக்கிறது. மேலும் இந்த அவிட்டத்தை ‘ச்ரவிஷ்டா’ என்றும் அழைக்கின்றனர்.அவிட்டத்தில் பிறந்தவர்கள் வீட்டில் தவிட்டுப் பானையெல்லாம் தங்கம் என்ற பழமொழி உண்டு. அதாவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருள் ஈட்டும் திறனை இந்த நட்சத்திரம் செய்கிறது என்று பொருள்.இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவானாக இருக்கிறார். இவர் இந்த அவிட்ட நட்சத்திரத்தில்தான் உச்சம் பெறுகிறார். அவிட்டம் என்றால் பணக்காரன் என்ற பொருளும் உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் புள்,பறவை,காக்கை,ஆவணி ஆகும். அவிட்ட நட்சத்திரத்தை துந்துபி வாத்தியக் கருவிகளோடு ஒப்பிடுவர்.புதன் பிறந்த நட்சத்திரம் அவிட்டம். காக்கை, மத்தளம் மற்றும் உடுக்கை போன்ற தோற்றத்தைக் கொண்டதாக இந்த நட்சத்திரம் உள்ளது. ஒவ்வொரு வருடம் தோறும் உபாகர்மா எனும் பூணூல் அணியும் பண்டிகை நாளாக உள்ளது. இந்நாளில்தான் மஹாவிஷ்ணு ஹயகீரிவராக அவதாரம் கொண்டு அசுரர்கள் எடுத்துச் சென்ற வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்மனிடம் கொடுத்த நாளாகச் சொல்லப்படுகிறது.
அஷ்ட வசுக்கள் புராணம்
மனுவின் மைந்தனான பிரஜாபதி ஆவார். இவர் படைப்புத் தொழிலுக்கு உதவி செய்பவராக இருப்பவர் ஆவார். பிரஜாபதி, இவரின் எட்டு மகன்கள்தான் தார, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகியோர். இவர்கள்தான் முறையே பூமி, அக்னி, நீர், வாயு, துருவ நட்சத்திரம், சந்திரன், வைகறை மற்றும் ஒளி ஆகிய அஷ்ட வசுக்களாக உள்ளனர்.
இவர்களின் கடைசிப் புத்திரனான பிரபாசன் என்கிற வசுவானவன் தனது மனைவி மீது அதிகம் மோகம் கொள்கிறான். அதற்காக அவள் கேட்பதை எல்லாம் பெற்றுத் தருகிறான். அச்சமயம், வசிஷ்டரின் ஆசிரமத்தில் கேட்டதையெல்லாம் தருகின்ற காமதேனு பசு இருப்பதாக கேள்விப்படுகிறாள். ஆகவே, அந்த பசு எனக்கு வேண்டும் என பிரபாசனிடம் கோரிக்கை வைக்கிறாள்.
பிரபாசனும் மனைவியின் மீது கொண்ட மோகத்தால் மற்ற வசுக்களையும் அழைத்துக் கொண்டு சென்று வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு காமதேனுவை களவாடிச் சென்றனர். இதையறிந்த வசிஷ்டர் கோபம் கொண்டு இவர்கள் பூமியில் பிறக்கக் கடவது என சாபம் கொடுத்தார். மனம் வருந்தி எட்டு பேரும் மன்னிக்க வேண்டினர். ஆனால், வசிஷ்டர் எட்டு பேரில் ஏழு பேர் பிறந்து ஒரு வருடத்திற்குள் பூமியில் மறைந்து சாபத்திலிருந்து விடுபடுவார்கள் என்றும். மனைவியின் மீது கொண்ட மோகத்தால் இந்த செயலுக்கு மூலக்காரணமான பிரபாசா மட்டும் பூமியில் நெடுங்காலம் வாழ்ந்து துன்பத்தை அனுபவித்து பின்புதான் சாபத்திலிருந்து விடுபடுவான் எனக் கூறினார்.
மகாபாரதப் புராணத்தில் வரும் சாந்தனு – கங்கை தம்பதிகளுக்கு புத்திரர்களாக பிறந்த ஏழு பேரும் ஒரு வருடத்திற்குள் சாப விமோச்சனம் பெற்றனர். ஆனால், பிரபாசா வசுவான எட்டாம் நபரானவர் பீஷ்மராக பிறந்து பிரம்மசாரியாக வாழ்ந்து பல துன்பங்களை அனுபவித்து அர்ஜீனனுடன் போரில் அம்பு எய்தப்பட்டு அம்பு படுக்கையில் பல காலம் இருந்து. உத்ராயணக் காலத்தில் உயிர்நீத்தார் பீஷ்மர் என்ற பிரபாசா (அஷ்ட வசு) ஆவார்.
பொதுப்பலன்கள்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் தங்களுக்கான நிலையிலிருந்து ஒரு வழியை கண்டறிவீர்கள். எப்படியும் வாழ்வில் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்வீர்கள். யாரிடமும் யுத்தம் செய்ய மறுப்பீர்கள். ஆனால், யாரேனும் யுத்தம் செய்துவிட்டால் விடமாட்டீர்கள். தொழில் மற்றும் உத்யோகத்தில் மேன்மை அடைவீர்கள் என்பது நிச்சயம் உறுதி. எளிமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்வீர்கள். முக்கியப் பிரமுகர்களிடம் எப்பொழுதும் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கை, கால்களில் நரம்பு தொடர்பான வலிகள் உண்டாகலாம். இருதயம் தொடர்பான பிரச்னைகள் உண்டாகும் என்பதால் எச்சரிக்கை தேவை. ரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புகள் ஒருசிலருக்கு வரலாம் எச்சரிக்கை தேவை.
அவிட்டத்திற்குரிய வேதை நட்சத்திரம்
வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். மிருகசீரிடம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.
பரிகாரம்
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் திருவாலம்பொழில் என்ற ஊரில் உள்ள ஆத்மநாதேஸ்வரர் கோயில் அஷ்ட வசுக்கள் வழிபட்ட தலமாகும். இங்கே செவ்வாய்க் கிழமை வரும் அவிட்ட நட்சத்திரத்தில் வழிபடுவது சிறந்த முன்னேற்றத்தை வாழ்வில் நம்பிக்கையைத் தரும்.